“நஜிப் ஒரே மலேசியாவுக்கு மரணச் சான்றிதழில் கையெழுத்திட்டு விடலாம்”

நேற்றிரவு ஷா அலாம் நிகழ்வு ஒன்றில் மலாய்க்காரர்களுக்கு ஆத்திரத்தை மூட்ட வேண்டாம் என மலாய்க்காரர் அல்லாதாருக்கு “பகைமைப்” போக்குடைய எச்சரிக்கையை விடுத்துள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை  பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியிருக்கிறார்.

நஜிப் “ஒரு பாவமும் செய்யாத” மலாய்க்காரர் அல்லாதாருக்கு விடுத்த எச்சரிக்கையை உண்மையான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்; அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரே மலேசியாவுக்கு “மரணச் சான்றிதழை வெளியிட்டு விடலாம்” என்று லிம் சொன்னார்.

பெக்கிடா எனப்படும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு  Pertubuhan Kebajikan dan Dakwah Islamiah Malaysia அமைப்பு நடத்திய அந்த நிகழ்வில் ஆற்றிய உரையில் அவர் இனவாத சீட்டைப் பயன்படுத்தியுள்ளதின் மூலம் நாட்டை அதிர்ச்சி அடையச் செய்து விட்டதாகவும் அந்த டிஏபி தலைமைச் செயலாளர் குறிப்பிட்டார்.

“மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக இனவாத சீட்டை பயன்படுத்துவதும் மலாய்க்காரர்களைப் பாதுகாக்க விரும்புவதாகக் கூறுவதும் அமைச்சர் ஒருவருடைய குடும்ப நிறுவனம் 250 மில்லியன் ரிங்கிட் “மாடுகளும் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளும்” (‘cows and condos’) என்ற ஊழலில் சம்பந்தப்படுவதற்கு அம்னோவுக்கு உரிமை அளிக்கிறதா?” என லிம் ஒர் அறிக்கையில் வினவினார்.

மலாய்க்காரர்களுடைய உணர்வுகளைக் கிளற வேண்டாம் என மலாய்க்காரர் அல்லாதாருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, 13 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்டுள்ள போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழலுக்கும் 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணகாய்வாளர் அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள 3.7 பில்லியன் ரிங்கிட் மித மிஞ்சிய செலவுக்கும் அங்கீகாரம் அளிக்கிறதா?”

மலாய்க்காரர்களுக்கு ஆத்திரத்தை மூட்ட வேண்டாம் என மலாய்க்காரர் அல்லாதாருக்கு கூறப்பட்டது.

மலாய்க்காரர்களுடைய உணர்வுகளைக் கிளற வேண்டாம் என்றும் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு  ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களை மாற்ற வேண்டாம் என்றும் நேற்றிரவு பெக்கிடா நிகழ்வில் பேசிய நஜிப்,  மலாய்க்காரர் அல்லாதாரை எச்சரித்தார்.

கூட்டரசு அரசியலமைப்பின் 153வது பிரிவில் பொறிக்கப்பட்டுள்ள மலாய்க்காரர்களுடைய சிறப்பு உரிமைகளில் ஒர் அங்குலத்தைக் கூட அம்னோ விட்டுக் கொடுக்காது என்றும் அம்னோ மட்டுமே மலாய்க்காரர்களைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

இன, சமய வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுடைய அவாக்களுக்கும் போராடுவதற்கான காலம் கனிந்து விட்டது என்றும் பாகான் எம்பி-யுமான லிம் சொன்னார்.

முதலில் மலாய்க்காரன் இரண்டாவதாக மலேசியன் என வலியுறுத்தும் அம்னோவின் “பாகுபாடான அரசியலை’  டிஏபி நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முதலில் மலாய்க்காரன் இரண்டாவதாக மலேசியன் என்னும் தனது “இனவாத சித்தாந்தத்தை” ஏற்றுக் கொள்ளாதவர்களை  மலாய்க்காரர்களுக்கு எதிரிகள் என்றும் துரோகிகள் என்றும் அம்னோவும் அதன் தோழர்களும் கூறுவதை டிஏபி கண்டிப்பதாகவும் லிம் தெரிவித்தார்.

ஒரே மலேசியாவைக் காப்பாற்றுங்கள் என நஜிப்புக்கு வேண்டுகோள்

நஜிப் ஐந்து முக்கிய கடப்பாடுகளை அறிவிப்பதின் மூலம் தமது ‘ஒரே மலேசியா’ சுலோகத்தைக் காப்பாற்றி மீட்க வேண்டும் என்றும் லிம் கேட்டுக் கொண்டார்.

அவை வருமாறு: நாங்கள் முதலில் மலேசியர்கள்; அடிப்படை மனித உரிமைகளையும் சிவில் சமூக உரிமைகளையும் அனுபவிப்பதற்கு மலேசியர்களுக்குத் தகுதி உண்டு; சமமான வாய்ப்புக்கள்; சட்ட ஆட்சி; உயர்ந்த வருமானத்தைக் கொண்ட அறிவாற்றல் மிக்க பொருளாதாரத்தை உருவாக்க நேர்மையான விவேகமான சமூகங்களை உருவாக்குவது.

“அம்னோ, மலேசிய அரசமைப்பை கடத்துவதற்கும் பகை உணர்வுடனும் வெறுப்புணர்வுடனும் மலேசியர்களைப் பிரிப்பதற்கும் நாம் அனுமதிக்கக் கூடாது”, என்றும் லிம் வலியுறுத்தினார்.

“அம்னோ எப்போதும் தனது இனவாத மலாய் மட்டும் என்ற அணுகுமுறையை நியாயப்படுத்துவதற்கு மலாய்க்காரர்களுடைய சிறப்புரிமை மீதான கூட்டரசு அரசமைப்பின் 153வது பிரிவை எடுத்துக் காட்டுகிறது.”

“ஆனால் அதே 153வது பிரிவு, மற்ற சமூகங்களின் சட்டப்பூர்வ நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறுவதைப் பற்றிக் குறிப்பிட அம்னோ தவறி விடுகிறது,” என லிம் தொடர்ந்து கூறினார்.