பெர்சத்து உறுப்பினர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் – முகிதீன்

டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கட்சியின் நடவடிக்கை ஓர் அவசர முடிவில்லை என்று முகிதீன் யாசின் இன்று தெரிவித்தார்.

எனவே, தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து பொறுமையாக இருக்க வேண்டும் என்று பெர்சத்துவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முகிதீன் வலியுறுத்தினார்.

“முன்னாள் ஐந்து உறுப்பினர்களான டாக்டர் மகாதீர் முகமட், முக்ரிஸ் மகாதிர், சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான், அமிருதீன் ஹம்சா மற்றும் டாக்டர் மஸ்லீ மாலிக் ஆகியோர் உறுப்பியத்தை இழந்துள்ள சூழ்நிலையை எதிர்கொள்வதில் பெர்சத்து உறுப்பினர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.”

“அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. மாறாக, அவர்களின் நடவடிக்கைகள் கட்சியின் அரசியலமைப்பை மீறியதால், அவர்களின் உறுப்பியம் உடனடியாக ரத்து செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது.”

“அவர்கள் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் இருந்தபோதிலும் நான் தனிப்பட்ட முறையில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று, மகாதீர் பெர்சத்து தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குள் நுழைந்து தன்னை நீக்குமாறு சவால் விட்டார்.

அதன் பின்னர் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மகாதீர், தான் இன்னும் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவராக இருப்பதை வலியுறுத்தியதோடு, பொதுச்செயலாளரின் பணி கட்சியின் அரசியலமைப்பில் இல்லை என்றும் அறிவித்தார்.

கட்சியின் அவைத் தலைவரான தன்னையும், மற்ற நான்கு கட்சி உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது சாதாரணமானதல்ல, அது தவறானது என்று விவரித்தார் மகாதீர்.

மேலும், பிரதமராக இருக்கும் முகிதீன், அனைத்து தரப்பினர்களுக்கும் நியாயமாக இருக்க விரும்புவதாகவும், எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கட்சியின் அரசியலமைப்பிற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“கட்சி அரசியலமைப்பிற்கு மேலான நபர்கள் யாரும் இல்லை” என்று அவர் கூறினார்.

பெர்சத்து கட்சியில் இருக்கக்கூடாது என்று மகாதீர் எடுத்த முடிவு, பெர்சத்து உச்ச மன்ற முடிவு மற்றும் கட்சியின் போராட்டத்திற்கு ஏற்றார் போல் இல்லை என்பதற்காக வருத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

“துன் (மகாதீர்) மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள், பக்காத்தான் ஹராப்பானுடன் தொடர்ந்து பணியாற்றத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது தான் துன்னின் விருப்பம் என்றால், அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் முகிதீன்.