“தேசிய கூட்டணிக்கே ஆதரவு” – ரிட்ஜுவான்

நேற்று, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதாக எதிர்ப்பார்க்கப்பட்ட பிரதமர் திணைக்களத்தில் அமைச்சர் முகமட் ரிட்ஜுவான் யூசோப்பின் பெயர் பரவலாக குறிப்பிடப்பட்டது.

சிறப்பு கடமைகளின் அமைச்சராக முகிதீன் யாசினால் நியமிக்கப்பட்ட ரிட்ஜுவான், இன்று அனைவருக்கும் தனது செய்தியை வெளியிட்டுள்ளார்.

அனைத்து அரசியல் தலைவர்களும் கோவிட்-19 பாதிப்பைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நேற்று குறிப்பிட்டுள்ளபடி அவரது பதவி விலகல் பிரச்சினையை அரசியலாக்க கூடாது என்றும் ரிட்ஜுவான் கூறினார்.

“இந்த பிரச்சினையை அரசியலாக்குவதை நிறுத்த அனைத்து அரசியல் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இன்றைய அரசாங்கத்துடன் இணைந்து அதன் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்.”

“கோவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்த டான் ஸ்ரீ முகிதீன் யாசினுக்கு அனுமதி கொடுங்கள்” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

தேசிய கூட்டணியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகிதீனுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும், அரசாங்கம் மீண்டும் மாறும் என்றும் நேற்று செய்தி வந்தது.

ரிட்ஜுவான் மற்றும் ஷாருதீன் முகமட் சால்லே ஆகிய இரண்டு பெயர்கள் இந்த நடவடிக்கையைத் தொடங்குவர் என்று பேசப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

ரிட்ஜுவான் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டதை மறுத்த அவரது அலுவலகம், பல மணி நேரம் கழித்தும் கூட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை. ரிட்ஜுவான் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதனிடையே நேற்றிரவு, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பெர்சத்து தலைமையகத்தில் ஷாருதீன் மகாதீருடன் சந்தித்ததை ஒரு குறுகிய காணொளி காட்டியது.

ஷாருதீனின் கருத்துக்களைப் பெற மலேசியாகினியின் முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை.

தேசிய கூட்டணிக்கு அளித்த தனது ஆதரவைத் திரும்பப் பெறவில்லை என்றும், பதவி விலகவில்லை என்றும் ரிட்ஜுவான் கூறியுள்ளார்.

“நான் மறுத்துவிட்டேன், அது போதும்” என்று அவர் கூறினார்.