கோவிட்-19: 57 புதிய பாதிப்புகள் , 43 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை

மலேசியாவில் மேலும் 57 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்றுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,819 ஆக உள்ளது.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் 10 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 47 உள்ளூர் நோய்த்தொற்றுகள் என்றார்.

47 உள்ளூர் தொற்று பாதிப்புகளில், 43 பாதிப்புகள் வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்டவை, மற்றும் நான்கு பேர் மட்டுமே உள்ளூர்வாசிகள் என்றார்.

வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட புதிய வழக்குகளில் செப்பாங் குடிநுழைவு தடுப்பு முகாமில் (டி.டி.ஐ) 24 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன; பஹாங்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மூன்று திரளைகள் சம்பந்தப்பட்ட 15 பாதிப்புகள் கண்டறியப்பட்டன; கம்போங் சுங்கை லூயி திரளையிலிருந்து ஒரு பாதிப்பு கண்டறியப்பட்டது; புடு திரளையிலிருந்து ஒரு பாதிப்பு கண்டறியப்பட்டது; மற்றும் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்படும் ஒரு வெளிநாட்டவரின் பாதிப்பு; அத்துடன் கிள்ளானில் உள்ள ஒரு தொழிலாளரின் பாதிப்பு ஆகும் என்றார்.

அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், 23 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்டனர். இன்றுவரை பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,353 அல்லது 81.25 சதவிகிதம் ஆகும்.

மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,351 ஆக உள்ளது.

மலேசியாவில் கோவிட்-19ல் இறந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் இன்று கூறினார்.

ஒன்பது நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.