சையத் சாதிக் நீக்கப்பட்டதால் மூவார் பெர்சத்து கட்சியில் பிளவு

பெர்சத்து கட்சியின் உறுப்பியத்தை இழந்ததை தொடர்ந்து, சையத் சாதிக் அப்துல் ரஹ்மானின் தொகுதியான மூவாரில் உள்ள பெர்சத்து கட்சியில் இப்பொது பிளவு ஏற்பட்டுள்ளது.

மூவார் பெர்சத்து கட்சி உறுப்பினர்கள் சையத் சாதிக்கிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்ட ஒரு நாள் கழித்து, இன்று அந்த அறிக்கையில் கையெழுத்திட்ட 21 பேரில் 12 பேர் அளித்த ஆதரவை திரும்பப் பெறத் தொடங்கினர்.

“அனைத்து கட்சி விவகாரங்களும் கட்சியின் அரசியலமைப்பிற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே சையத் சாதிக்கின் உறுப்பியம் ரத்து செய்யப்பட்டதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.”

“இந்த நேரத்தில் சையத் சாதிக்கின் அனைத்து சேவைக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியை வலுப்படுத்தும் செயல்களை நாங்கள் தொடருவோம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைமையகத்துடன் விவாதிப்போம்.”

சமீபத்திய அந்த அறிக்கையை மூவார் பெர்சத்து பிரிவின் துணைத் தலைவர் பசுத் நின், ஜைனுடின் சயூட்டி மற்றும் பிரிவின் தகவல் தொடர்பு தலைவர் ஹஸ்ரி சலீம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது, மகாதீர், சையத் சாதிக் மற்றும் மேலும் மூன்று உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்தனர். அவர்கள் எடுத்த இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மே 28) பெர்சத்து கட்சி பொதுச்செயலாளர் முஹம்மது சுஹைமி யஹ்யா, பெர்சத்து கட்சியில் இருந்து அவர்களின் உறுப்பியம் ரத்து செய்யப்பட்டதாக ஒரு கடிதத்தை வெளியிட்டார்.

இதனிடையே, சுஹைமிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்று விளக்கி மகாதீர், உறுப்பியம் ரத்து செய்யப்பட்டத்தை மறுத்து, சுஹைமியை பதவியில் இருந்து நீக்கிவிட்டார்.