டாக்டர் மகாதீரின் நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது’ – ரோசோல் வாஹித்

உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் துறையின் துணை அமைச்சர் ரோசோல் வாஹித், எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் டாக்டர் மகாதிர் முகமது மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை ‘பைத்தியக்காரத்தனமான’ செயலாக கருதுவதாகக் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியின் தரப்பில் சாய்த்த அந்த அரசியல்வாதிகள் ‘மன்னிக்க முடியாத பாவங்களை’ செய்ததாகவும் ரோசோல் கூறினார்.

“ஒரு அரசியல்வாதி குறிப்பாக நாட்டில் நன்கு மதிக்கப்படும், மற்றும் நாட்டிற்கு அதிக சேவை செய்த ஒரு அரசியல் தலைவர் இப்படி செய்தது துரதிர்ஷ்டவசமானது. இது சாதாரண நல்லறிவுக்கு அப்பாற்பட்டது என்று நான் கருதுகிறேன்,” என்றார்.

மகாதீர் மற்றும் அந்த நான்கு உறுப்பினர்களின் தவறு மன்னிக்க முடியாதது என்று ரோசோல் கூறினார். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்னலமற்றவர்களாக இருக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

ரோசோல் முன்பு அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். பிப்ரவரி 12, 2019 அன்று அவர் மற்ற ஐந்து அம்னோ உறுப்பினர்களுடன் பெர்சத்துவில் சேர்ந்தார்.

தேசிய கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் ரோசோல் துணை அமைச்சராக பதவி ஏற்றார்.