அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெர்சத்து கட்சியில் சேர வேண்டும் என்றால் அவர்களுக்கு அமைச்சர் அல்லது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி) பதவிகளை கொடுத்து ‘ஈர்க்கப்பட வேண்டும்’ என்று பரிந்துரைக்கும் முகிதீன் யாசினின் குரலை ஒத்திருந்த ஆடியோ பதிவு ஒன்று வெளிவந்ததைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்.ஏ.சி.சி) அது குறித்து இன்று புகாரளிக்கப்பட்டது.
டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவாக இருக்கும் முகநூல் பக்கத்தில் இந்த ஆடியோ கசிந்துள்ளது. இது, பிப்ரவரி 23 அன்று பெர்சத்துவின் உச்ச மன்ற கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
“ஆடியோவில் குறிப்பிட்டுள்ளபடி, தேசிய கூட்டணி (பி.என்) அரசாங்கம், அமைச்சர் பதவிகளையும் ஜி.எல்.சி. பதவிகளையும் பிரித்து கொள்வது தெரிகிறது,” என்று புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி கட்டிடத்திற்கு வெளியே ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அமானாவின் இளைஞர் பிரிவின் துணை தலைவர் ஷஸ்னி முனீர் முகமட் கூறினார்.
டிஏபி இளைஞர் தலைவர் ஹோவர்ட் லீ மற்றும் பெர்சத்து இளைஞர் எக்ஸ்கோ அபு ஹபீஸ் சல்லே ஹுடின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
“தேசிய கூட்டணியின் இந்த பதவி பகிர்வு, ஒரு திரைப்படத்தில் கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்ததை பங்கு போடுவது போல் உள்ளது, ‘உனக்கு ஒன்று, எனக்கு ஒன்று’, ‘உங்களுக்கு ஒரு பதவி, எங்களுக்கு ஒரு பதவி’ என்று விநியோகிப்பது போல் உள்ளது.”
இருப்பினும், பி.கே.ஆர் பிரதிநிதிகள் யாரும் வரவில்லை.
கடந்த சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் பரவலான அந்த ஆடியோ பதிவில், முகிதீன், அம்னோ தலைவர்களுக்கு அமைச்சரவை மற்றும் ஜி.எல்.சி. பதவிகளை பகிர்ந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 23 அன்று பெர்சத்துவின் உச்ச மன்ற கூட்டத்தில் இந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.