டாக்டர் மகாதிர் முகமதுக்கு ஆதரவாளர்களாக அறியப்பட்ட மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள மூன்று பெர்சத்து தலைவர்கள் முகிதீன் யாசினால் நீக்கம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்கள் பெர்சத்து உச்ச மன்றத்தின் உறுப்பினர் அக்ரம்ஸ்ஷா முவாம்மார் உபைடா சனூசி, பினாங்கு பெர்சத்து தலைவர் மர்சுகி யாஹ்யா மற்றும் கெடா பெர்சத்து துணைத் தலைவர் அனுவார் அப்துல் ஹமீத் ஆகியோர் அடங்குவர்.
அம்மூவரின் சேவைகளை நிறுத்துவதற்கான அக்கடிதம், மே 2 தேதியிடப்பட்டு, பெர்சத்துவின் தலைவர் மற்றும் செயல் தலைவரான முகிதீனால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தின் படி, அம்மூவரின் பதவி நீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முகிதீன் அதில் எந்த காரணமும் கொடுக்கவில்லை.
இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, மர்சுகி நேற்று பெர்சத்து செயலாளர் சுஹைமி யஹ்யாவிடமிருந்து வாட்ஸ்அப் வழியாக அக்கடிதத்தைப் பெற்றதாகக் கூறினார். அதே நேரத்தில் இன்று காலை தனக்கு அக்கடிதம் கிடைத்ததாக அனுவார் கூறினார்.
மர்சுகியும் பெர்சத்துவின் பொதுச்செயலாளராக இருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் முகிதினால் நீக்கப்பட்டார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து, பெர்சத்துவின் அவைத் தலைவரான தன்னிடம் ஆலோசிக்காததால், இந்த நீக்கத்தை டாக்டர் மகாதீர் அங்கீகரிக்கவில்லை என்று கூறுனார்.
முகிதீனுடன் ஒத்துப்போகாத கட்சித் தலைவர்களை அகற்றுவதற்காகவே இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்புவதாக மர்சுகி கூறினார்.
அதே கடிதத்தை அக்ரம்ஸ்ஷாவும் பெற்றுள்ளார் என்பதையும் மர்சுகி உறுதிப்படுத்தினார். கட்சியை தோற்றுவித்த ஏழு முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அக்ராம்ஸ்யாவை ஏன் நீக்கிவிட்டார் என்று புரியவில்லை என்று மர்சுகி கூறியுள்ளார்.
“கட்சியில் ஜனநாயகம் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.
அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் தனது விளக்கத்தைப் பெற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று மர்சுகி கூறினார்.
இதற்கிடையில், அனுவார், கெடா பெர்சத்துவின் துணைத் தலைவராகவும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார். மகாதீரின் ஆதரவாளர்களை கட்சியின் தலைமையில் இருந்து அகற்ற முகிதீனின் முகாமின் முயற்சி இது என்று அவர் மேலும் கூறினார்.
“இதற்கு முன் முக்ரிஸ் மகாதீரை அவர்கள் பணிநீக்கம் செய்தனர். இப்போது, அவர்கள் துணைத் தலைவரான என்னை இலக்காக ஆக்குகிறார்கள். இனிமேல் யாரும் இல்லை. எனவே அவர்கள் கெடாவைக் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்,” என்றார்.
முகிதீன் மற்றும் சுஹைமிக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் (MACC) மற்றும் கட்சியின் ஒழுக்காற்று பிரிவிற்கு அவர் அளித்த புகார்களுடன் இந்த பதவி நீக்கம் தொடர்புடையது என்றும் அவர் நம்புவதாகக் கூறினார்.
“என்னை அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க அழைத்திருக்கலாம். நான் ஏன் புகாரளித்தேன் என்பது குறித்து எல்லாவற்றையும் சொல்லியிருப்பேன். ஆனால் அவர்கள் கோழைகள். என்னை பதவி நீக்கம் செய்ய தேர்வு செய்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
முகிதீனின் பதவி நீக்கம் கடிதத்தை அங்கீகரிக்கவில்லை என்றும் அது செல்லாது என்றும் கருதுவதாக அனுவார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவருடன் கலந்துரையாடிய பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.