15வது பொதுத்தேர்தல் மற்றும் சினி இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க ஜாஹிட் – நஜிப் சந்திப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில், 15வது பொதுத் தேர்தல் மற்றும் சினி இடைத்தேர்தலுக்கான தயார் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கட்சியின் வட்டாரங்களின்படி, இது புத்ராஜெயாவுக்கும், பெர்சத்து அவைத் தலைவரான டாக்டர் மகாதிர் முகமது மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய தரப்பினருக்கும் இடையிலான முடிவில்லாத அரசியல் குழப்பத்தை தொடர்ந்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

“அன்றிரவு சந்திப்பு வழக்கமான ஒன்றாகவே இருந்தது, ஆனால் கட்சி விவகாரங்கள் மற்றும் 15வது பொதுத்தேர்தலுக்கான ஆயுத்தம் பற்றி நிறைய விவாதங்கள் இருந்தன.”

“தற்போதைய உறுதியற்ற அரசியல் தன்மையைக் கருத்தில் கொண்டு, 15வது பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஒரு தீவிரமான விவாதமாக இருந்தது.”

“குறுகிய காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், களத்தில் இறங்கத் தயாராக இருப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அதைத் தவிர, சினியில் வரவிருக்கும் இடைத்தேர்தலும் இந்த விவாதத்தில் அடங்கும் என்று அந்த ஆதாரம் தெரிவித்தது.

நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் தனது கட்சி 15வது பொதுத்தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக நேற்று அம்னோ தலைவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று இரவு நஜிப் தனது வீட்டிற்கு வருகை புரிந்ததை தொடர்ந்து இந்த தயார்நிலையை வெளிப்படுத்தியுள்ளார் ஜாஹிட்.

“நாங்கள் 15வது பொதுத்தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். நீங்கள் அனைவரும் எங்களுடன் தயாராக உள்ளீர்களா?” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் எழுதியிருந்தார்.

பின்னர் ஜாஹித்தின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த நஜிப், அரசியல் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், பாரிசான் கட்சி 15வது பொதுத்தேர்தலுக்கு தயாராக இருப்பதாக விளக்கினார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தல் வரை தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை, பாரிசான் கட்சி தொடர்ந்து ஆதரித்து வரும் என்று நஜீப் தெரிவித்தார்.

இதற்கிடையில், பெக்கன் அம்னோ பிரிவு தலைவராக நஜிப் இருப்பதால், சினி இடைத்தேர்தல் தொடர்பான விவாதங்கள் குறித்து கவனம் செலுத்தியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

வேட்பாளர் பிரச்சினைகள் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன என்றும், பாரிசான் நியமனத்திற்கு பல பெயர்கள் முன்மொழியப்பட்டன என்றும் ஆதாரங்கள் தெரிவித்தன.

“சினி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களில் நஜிப்பின் மகன் முகமட் நிசாரரின் பெயரும் விவாதிக்கப்பட்டது.”

“நஜிப்பின் மகனா அல்லது வேறு நபர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதை அம்னோ மற்றும் பாரிசான் தலைவர்களால் தீர்மானிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.