புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் வேலையில்லா விகிதம் 2020 ஆம் ஆண்டில் 5.5 சதவிகிதம் அல்லது 860,000க்கும் அதிகமான வேலையற்றோர் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று புத்ராஜெயாவில் குறுகிய கால பொருளாதார மீட்சித் திட்டத்தை வெளியிட்ட போது முகிதீன் இது குறித்து பேசினார். இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மலேசிய பொருளாதாரம் சுருங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதே இதற்குக் காரணம் என்று பிரதமர் முகிதீன் யாசின் கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான நாட்டின் முயற்சிகளால் இந்த சுருக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், இது இன்னும் உலகளவில் மற்றும் உள்நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் முகிதீன் தெரிவித்தார்.
“இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக, அரசாங்கம் PRIHATIN மற்றும் கூடுதல் PRIHATIN PKS உட்பட RM260 பில்லியன் உள்ளிட்ட பொருளாதார ஊக்கத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.
அதிகரித்து வரும் வேலையின்மை சவால்களை எதிர்கொள்வதற்கும், பொருளாதார மீட்சி காலத்தில் நாட்டில் மக்களின் வேலைவாய்ப்பை தக்கவைக்க உறுதி செய்வதற்கும் அரசாங்கம் RM9 பில்லியனை ஒதுக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
பல முயற்சிகளின் மூலம் வழங்கப்படும் இந்த ஒதுக்கீடு, நாடு முழுவதும் உள்ள சுமார் மூன்று மில்லியன் பணியாளர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது பல துறைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலை மற்றும் வருமானத்தை இழக்கும் அபாயம் குறித்து கவலைப்படும் மக்கள் பலர் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.”
“பொருளாதாரம் மீண்டு வர இன்னும் நேரம் எடுக்கும் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆதலால், பொருளாதார மீட்சி காலம் முழுவதும் உதவி தேவைப்படும் மக்கள் சமூகத்தில் உள்ளனர்” என்று அவர் கூறினார்.