‘நான் பதவி விலகவில்லை, விலகவும் மாட்டேன்’ – ரிட்ஜுவான் யூசோப்

பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரிட்ஜுவான் யூசோப் பதவி விலகப்போவதாக வெளிவந்த வதந்தியை இன்று மறுத்துள்ளார்.

இன்று காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முகமட் ரிட்ஜுவான், இதுபோன்ற ஊகங்களை பரப்புவதன் மூலம் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை சீர்குழைக்க விரும்பும் சில தரப்பினர் இருப்பதாக விளக்கினார்.

“நான் பதவி விலகவில்லை, பதவி விலகவும் விரும்பவில்லை என்று மீண்டும் சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

நாட்டை வலுப்படுத்த பிரதமர் முகிதீன் யாசின் அமைச்சரவையில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் அந்த அலோர் காஜா நாடாளுமன்ற உறுப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மே 29 அன்று, முகமட் ரிட்ஜுவான் ராஜினாமா செய்ய விரும்புவதாக வதந்திகள் பரவியது. இதனால் முகிதீன் தலைமையிலான தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் தலைவிதி குறித்து கேள்விக்குறியைத் தூண்டியது.

இருப்பினும், இன்று அந்த செய்தியை மறுத்து, முகிதீன் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் முகமட் ரிட்ஜுவான் கூறினார்.

“தற்போதைய நிலைமையை அரசியலாக்க வேண்டாம், கோவிட்-19க்கு பிந்தைய காலத்தை சமாளிக்க நாட்டிற்கு உதவ ஒன்றாக செயல்படுவோம்” என்று அவர் மேலும் கூறினார்.