மூத்த அமைச்சர் அஸ்மின் அலியின் குழு, மற்றொரு பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினரை தேசிய கூட்டணியின் ஆதரவாளராக இழுத்துள்ளது.
லுபோக் அன்து நாடாளுமன்ற உறுப்பினர் தம்பாட் @ ஜுகா முயாங்கை பி.கே.ஆரிலிருந்து வெளிகொண்டுவந்து, பி.என் அரசாங்கத்தையும், பிரதமர் முகிதீன் யாசினையும் ஆதரிக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த முகாம் பொறுப்பேற்றதாக மலேசியாகினி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பேச்சுவார்த்தை ஜுகாவுடனும், செராட்டோக் நாடாளுமன்ற உறுப்பினர் அலி பிஜுவுடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
அஸ்மின் தலைமையில் பெர்சத்து கட்சிக்கு தாவிய 10 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அலியும் ஒருவர் ஆவார். இந்த குழுவின் விலகலைத் தொடர்ந்து, பெர்சத்து கட்சி, பாக்காத்தான் கூட்டணியில் இருந்து விலகி தேசிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியது.
பி.கே.ஆரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த பின்னர், ஜுகா இன்று அஸ்மினுடன் சந்திப்பதை மேற்கொண்டார். அந்த மூத்த அமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அவர்கள் பின்னர் முகிதீனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கு, ஜுகா பி.என் அரசாங்கத்திற்கு தனது ஆதரவைக் கூறி முகிதீனுக்கு ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பை (எஸ்டி) சமர்ப்பித்தார்.
அஸ்மின் அவர்கள் சந்தித்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு ஜுகாவை வாழ்த்தியுள்ளார்.
“அருமை ஒய்.பி. ஜுகா அவர்களே! இபான் இனத்தின் வீரன் நீங்கள்!” என்று தனது ட்விட்டரில் அஸ்மின் பதிவிட்டார்.