கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு: வெளிநாட்டு தொழிலாளர்களை குறை கூற வேண்டாம் என்கிறது MoH

கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பைத் தொடர்ந்து, நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து சுகாதார அமைச்சு கவலைகளை எழுப்பியுள்ளது.

நேற்று ஒரு முகநூல் பதிவில், பல வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு வெளியே கூடல் இடைவெளியையும், பிற தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது என்று சுகாதார அமைச்சு கூறியது.

“வெளிநாட்டு தொழிலாளர்களிடையே பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்காமல் போவதே இதன் காரணம். வேலையில் இருக்கும் போது மட்டுமே அவர்கள் எஸ்ஓபிகளுக்கு இணங்குகின்றனர், வீட்டில் இணங்குவதில்லை.”

“குறுகிய சூழ்நிலையிலும் இடத்திலும் வாழ வேண்டியுள்ளதால் நாம் அவர்களைக் குறை கூற முடியாது. அவர்களுக்கு வேறு வழியில்லை.”

“அவர்கள் வறுமை காரணமாக நம் நாட்டுக்கு வேலை செய்ய வெளிநாட்டிலிருந்து வந்துள்ள தொழிலாளர்கள். நிச்சயமாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கள் சொந்த நாட்டில் இருக்கவே விரும்புவார்கள். யாரும் சிக்கலில் வாழ விரும்புவதில்லை” என்றார்.

பல மாநிலங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. பணிபுரியும் இடங்களிலும், நான்கு குடிநுழைவு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டினரிடையே புதிய திரளைகள் சமீபத்திய வாரங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.

எஸ்ஓபி இணக்கம் காரணமாக உள்ளூர் மக்களிடையே ஏற்பட்ட பாதிப்புகளில் சரிவைக் காட்டினாலும், வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் இது ஏற்படவில்லை.

பல வெளிநாட்டினர் நம்மிடையே வாழ்கின்றதால், மலேசியர்கள் இந்த அதிகரிப்பை தங்கள் சொந்த பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

அந்நிய நாட்டினர் எஸ்ஓபி-க்கு இணங்குவதை உறுதி செய்வதில் உள்ளூர் சமூகமும் ஒரு பங்கை வகிக்க வேண்டும். ஆனால் அவர்களின் முதலாளிகளே ஒரு பெரிய பங்கை வகிக்க முடியும் என்று சுகாதார அமைச்சு மேலும் கூறியது.

“முதலாளிகள் அவர்களுக்கு அதிக வீட்டுவசதிகளை வழங்க வேண்டும். இதனால் இந்த தொழிலாளர்கள் கூடல் இடைவெளியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு வாய்ப்புண்டு.” என்றார்.