ஜூன் 10 முதல், வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்கள், தங்கள் வீட்டிலேயே இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் முன்பு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்படுவதை விட இது வேறுபட்டுள்ளது.
“… அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததும், அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். நோய்க்கு நேர்மறையாக கண்டறியப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். எதிர்மறையானவர்கள் வீட்டிற்குச் சென்று தனிமைப்படுவர்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், அவர்கள் மைசெஜாத்திரா பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து கொண்டும், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முழுவதும் கைப்பட்டை (wristband) அணிய வேண்டும் என்றும் இஸ்மாயில் கூறினார்.
“எனவே வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்று அவர் கூறினார். அவர்களை அடையாளம் காண கைப்பட்டை (wristband) பயன்படுத்தப்படும் என்று மேலும் அவர் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுபவர்களுக்கு RM1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளலாம். அவர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.