கோவிட்-19 பரவுவதைத் தடுக்க கிட்டத்தட்ட மூன்று மாத கால கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, சில தளர்வுகளுடன் கூடிய மீட்சி நிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஜூன் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார். இது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீடிக்கும் எனக் குறிப்பிட்டார்.
ஜூன் 10 முதல் அனுமதிக்கப்படும் நடவடிக்கைகளின் பட்டியல் பின்வருமாறு.
1) மாநிலம் கடந்த பயணம்
மார்ச் 18 முதல் தடைசெய்யப்பட்ட மாநிலம் கடந்த பயணம் இப்போது அனுமதிக்கப்படும்.
இருப்பினும், தீவிர நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளின் (பி.கே.பி.டி) கீழ் உள்ள பகுதிகளுக்கு இன்னும் தடை விதிக்கப்பட்டு வருவதாக முகிதீன் கூறினார்.
ஆகவே மக்கள் இப்போது தங்கள் பெற்றோர்களைப் பார்க்க ஊருக்கு தாராளமாகச் செல்லலாம் என்றார் முகிதீன். ஆனாலும், வயதானவர்கள் கோவிட்-19 நோய்க்கு அதிகமாக பாதிக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2) பல்வேறு தொழில்கள், வர்த்தக துறைகள் மீண்டும் திறக்கப்படும்
மே 4 முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ் விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும், தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் சில வணிகங்களும் வர்த்தக துறைகளும் நிர்ணயிக்கப்பட்ட இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) உட்பட்டு ஜூன் 18 முதல் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
முடிதிருத்தும் நிலையம், சிகை அலங்கார நிலையம், திறந்த சந்தை, காலை சந்தை, இரவு சந்தை, உழவர் சந்தை, பஜார், புட்கோர்ட், ஹாக்கர் கடை, உணவு கடை, உணவு டிரக் மற்றும் சலவை நிலைய சேவை ஆகியவை இதில் அடங்கும்.
3) கூட்டங்கள்
பி.கே.பி.பி. இன் கீழ், கூட்டங்கள் மற்றும் பயிற்சி பட்டறைகள் அனுமதிக்கப்படும். இருப்பினும், சுகாதார நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்; பங்கேற்பாளர்களிடையே உகந்த இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.
4) பொழுதுபோக்கு நடவடிக்கைகள்
வளாகங்கள் மீண்டும் திறக்கப்படுவதால் அருங்காட்சியகத்திற்கு வருகை அனுமதிக்கப்படும்.
வணிகக் குளம் உட்பட மீன்பிடி பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும்.
இதேபோல், உட்புற மேடை நிகழ்ச்சிகளும் அனுமதிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார நெறிமுறைக்கு இணங்க வேண்டும்.
5) விளையாட்டு நடவடிக்கைகள்
உடல் ரீதியான தொடர்பில் ஈடுபடாத வரை குழு விளையாட்டுகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதில், போலிங், பூப்பந்து, வில்வித்தை, மற்றும் பிற ஒத்த விளையாட்டுகளும் அடங்கும்.
சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் குழு நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும்.
இருப்பினும், அரங்கங்கள் மற்றும் குளங்களில் ஆதரவாளர்கள் கூடும் மற்றும் பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
ரக்பி, மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, கூடைப்பந்து மற்றும் ஹாக்கி ஆகியவை இன்னும் அனுமதிக்கப்படாத விளையாட்டு நடவடிக்கைகளில் அடங்கும்.