இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியா 19 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,322 ஆக உள்ளது.
இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஆறு இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 13 உள்ளூர் நோய்த்தொற்றுகள் என்று தெரிவித்தார்.
13 உள்ளூர் நோய்த்தொற்று பாதிப்புகளில், இரண்டு வெளிநாட்டினர், மற்றும் 11 உள்ளூர் மக்கள் சம்பந்தப்பட்டது என்றார். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், 39 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இதனால் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 6,674 அல்லது 80.2 சதவிகிதமாக உள்ளது.
மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,531 ஆக உள்ளது.
ஐந்து நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர், எந்த நோயாளிகளுக்கும் சுவாச உதவி தேவைப்படவில்லை.
மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் தெரிவித்தார். இன்று புதிய இறப்புகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.