லங்காவியில் உள்ள தங்கும்விடுதிகள் ஒரு மணி நேரத்திற்குள் 1,000 முன்பதிவுகளைப் பெற்றன

பிரதம மந்திரி முகிதீன் யாசின் இன்று பிற்பகல் மீட்சிக்கான கட்டுப்பாட்டு உத்தரவை (பிகேபிபி) அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் லங்காவியில் உள்ள ஹோட்டல்கள் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 1,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளன.

கோவிட்-19 பரவல் காரணமாக பாதித்துள்ள சுற்றுலாத்துறைக்கு இந்த வளர்ச்சி சாதகமான தொடக்கத்தை குறிக்கிறது என்று லங்காவி சுற்றுலா சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜைனுதீன் காதிர் தெரிவித்தார்.

“மேலும், மாலை 4 மணி முதல் மாலை 4:45 மணி வரை ஒரு மணி நேரத்திற்குள் 1,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளோம். இது ஒரு சாதனை. லங்காவிக்கு செல்லும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து எங்கள் அனைத்து ஹோட்டல்களும் 1,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளன,” என்று அவர் கூறினார்.

ஜூன் 10 முதல் டிசம்பர் 31 வரை லங்காவிக்கு ஒரு மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை சங்கம் நிர்ணயித்துள்ளது என்று ஜைனுதீன் தெரிவித்தார்.

அதே நேரத்தில், கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. குறிப்பாக நீச்சல் குளங்கள் போன்ற ஹோட்டல்களில் பயன்படுத்தக்கூடிய வசதிகள் குறித்து தெளிவாக இருக்க வேண்டும்”.

“விடுமுறை நாட்களில் குடும்பங்கள் குழந்தைகளுடன் வருவார்கள். நிச்சயமாக நீச்சல் குளத்தைப் பயன்படுத்த விரும்புவார்கள். ஆனால் பிரதமரின் அறிவிப்பில் அது குறித்து விரிவாக கூறப்படவில்லை. மேல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்காக சுற்றுலா அமைச்சரை நான் சந்திப்பேன்” என்று அவர் கூறினார்.

இருப்பினும், கேபிள் கார்கள் மற்றும் தீம் பார்க்குகள் உள்ளிட்ட லங்காவியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் இன்னும் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளன என்று ஜைனுதீன் கூறினார்.