சிறப்பு விடுப்பில் செல்லுமாறு முகிதீன் வலியுறுத்தப்படுகிறார்

அரசியல் ஆதரவை பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிகளை கொடுக்குமாறு பரிந்துரைக்கும் முகிதீன் குரலை ஒத்து ஒலிக்கும் ஆடியோ பதிவுகள் குறித்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பிரதமர் முகிதீன் யாசின் சிறப்பு விடுப்பு எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார்.

நீதியை உறுதி செய்வதற்கும் விசாரணையின் எதிர்மறையான கருத்தை தவிர்ப்பதற்கும் இது முக்கியம் என்றுள்ளார் வழக்கறிஞர் முகமட் ஹனீப் கத்ரி அப்துல்லா.

இன்று ஒரு அறிக்கையில், ஹனிப், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) இந்த வழக்கை விசாரிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.

விசாரணை காலகட்டத்தில் சிறப்பு விடுப்பு எடுக்குமாறு முகிதீனை வலியுறுத்தி மற்றொரு வழக்கறிஞர் அய்டில் காலித் வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவாக ஹனீப்பின் அறிக்கை இருந்தது.

ஜூன் 2 ஆம் தேதி முகநூலில் வெளியிடப்பட்ட அய்டிலின் பதிவில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை சிறப்பு விடுமுறை எடுக்குமாறு ஒரு காலத்தில் முகிதீன் பரிந்துரைத்ததை நினைவுபடுத்தினார்.

2015 ஆம் ஆண்டில் முகிதீனின் அறிக்கையை அவர் குறிப்பிட்டார். அப்போது நஜிப் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், 1MDB வழக்கு விசாரணைகள் நிலுவையில் இருந்த நிலையில் ஒரு முழு விசாரணையை அனுமதிக்க நஜிப் ரசாக்கை சிறப்பு விடுமுறை எடுக்குமாறு முகிதீன் அப்போது பரிந்துரைத்தார்.

“விசாரணை நியாயமானதாகவும் சுதந்திரமாகவும் இருக்க அனுமதிக்கும் நோக்கில், விசாரணை முடியும் வரை முகிதீன் விடுப்பு எடுக்க வேண்டும்.”

ஜூன் 1 ஆம் தேதி, பெர்சத்து இளைஞர் பிரிவு மற்றும் பாக்காத்தான், (பி.கே.ஆர் பிரதிநிதிகள் இல்லாமல்), முகிதீனின் குரலுக்கு ஒத்த ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டது. அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் அல்லது அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனங்களில் (ஜி.எல்.சி) பதவியை கொடுத்து பெர்சத்துவில் சேர ‘ஈர்க்கப்பட வேண்டும்’ என்று பரிந்துரைத்ததை அடுத்து, அவர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்.ஏ.சி.சி) புகார் அளித்தனர்.

டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவாக இருக்கும் முகநூல் பக்கம் ஒன்றில் அந்த ஆடியோ கசிந்தது. அந்த ஆடியோ பிப்ரவரி 23 அன்று பெர்சத்து உச்ச மன்ற கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது என நம்பப்படுகிறது.

பதிவில், பிரதமரை ஒத்த ஒரு நபர் கூறுகிறார்:
“அம்னோ எம்.பி.க்களுக்கு புதிய அரசாங்கம் அமைக்கப் போகிறார்கள் என்று தெரிந்தால், அதில் அம்னோ இணையும் என்று தெரிந்தால், பின்னர் சேருவதற்குப் பதிலாக இப்போதே எங்களுடன் ஏன் சேரக்கூடாது?
“நாம் அவ்வாறு செய்தால், அவர்களில் பெரும்பாலோர் அம்னோவை விட்டு வெளியேறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். நஜிப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 முதல் 20 பேர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.”
“குறிப்பாக ஒரு பதவியை கொடுத்தால்… அமைச்சர் பதவி இல்லையென்றால் ஒரு ஜி.எல்.சி. தலைவர் பதவி” என்று அந்த குரல் கூறியது.