ஜார்ஜ் ஃபிலாய்ட்: இனவாதம் குறித்து மலேசிய மக்களுக்கு ஒரு நினைவூட்டல் – சுஹாகாம்

46 வயதான ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிலாய்ட் காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டபோது இறந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் நிகழும் பரவலான போராட்டங்களுக்கு மத்தியில், இந்த சம்பவம் மலேசியர்களுக்கு ஒரு நினைவூட்டல் என்று மலேசியாவின் மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) தெரிவித்துள்ளது.

“இந்த கடினமான நேரத்தில் அமெரிக்க மக்களுக்கு ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தும் இவ்வேளையில், இனப் பிரச்சினைகள், இன பாகுபாடு மற்றும் குறைந்த சகிப்புத்தன்மை மனப்பான்மை போன்ற பிரச்சினைகள் மலேசியாவிலும் உள்ளன என்பதை மலேசியர்களுக்கு நினைவூட்டுவதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொள்ள சுஹாகாம் விரும்புகிறது”.

“வெறுப்புணர்ச்சி கொண்ட பேச்சு, இனவெறி, தனிப்பட்ட நலனுக்காக இனப்பிரச்சனைகளை அரசியலாக்குவது, சமூக ஊடகங்களில் அகதிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மனு உட்பட சமீபத்திய சம்பவங்களில் பல அடங்கியுள்ளன” என்று சுஹாகாம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

“தொடர்ச்சியான கோவிட்-19 நோய்த்தொற்றுகளைத் தொடர்ந்து, அந்நிய தொழிலாளர் குடியேற்ற எதிர்ப்பு உணர்வு மோசமடைந்துள்ளது. பெரும்பாலான நோய்த்தொற்று அவர்களின் வாழ்க்கை சூழ்நிலைகள் அல்லது முதலாளி வழங்கியுள்ள குடியிருப்பு வசதி காரணமாக ஏற்படுகிறது என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.”

“மலேசியாவில் இனப்பிரச்சனைகள் இருக்கிறதா இல்லையா என்று விவாதிப்பதற்கு பதிலாக, பல நூற்றாண்டுகளாக இருந்து தொடர்ந்து வரும் இன பாகுபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்படுவது நல்லது.”

“இனவெறி மற்றும் சகிப்புத்தன்மை இல்லாமைக்கு எதிராக போராட அனைவருக்கும் சுஹாகாம் அழைப்பு விடுக்கிறது. கொள்கையளவில், இனவாதம் என்பது தார்மீக ரீதியில் தவறானது. மலேசியா போன்ற ஒரு பல்லின சமூகத்தில், மதம், இனம், பிறப்பு, அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடின்றி ஒருவரை பார்க்க வேண்டும்”, என்று அந்த ஆணையம் கூறியது.

இனப்பிரச்சினைகள், இனவெறி மற்றும் சகிப்பின்மை இல்லாமை, வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தூண்டிவிடுவதோடு, பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான நிலையைப் புரிந்து கொள்ள ஒரு தடையாக இருக்கின்றன என்றும் கூறியுள்ளது சுஹாகாம்.

கடந்த மே மாதம் 25-ம் தேதி அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாணத்தின் மின்னியாபொலிஸ் நகரத்தில் 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்டு ஒரு கடையில் சிகரெட் வாங்கச் சென்றுள்ளார். அவர் கொடுத்த 20 டாலர் நோட்டு போலியானது என்ற சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது, ஒரு போலீஸ் அதிகாரி தனது கழுத்தில் காலை வைத்து நெரிக்கும்போது ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டு பரிதாபமாக அலறினார். ஆனால் எதையும் காதில் வாங்காத அந்த வெள்ளையின போலீஸ் தொடர்ந்து ஒன்பது நிமிடங்கள் ஃப்ளாய்டின் கழுத்தை அழுத்த, ஃபிளாய்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம்தான் தற்போது அமெரிக்காவே வன்முறையால் பற்றி எரிவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஃபிலாய்டின் மரணம் அமெரிக்க குடிமக்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இதன் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அது அமெரிக்க நாடு தழுவிய போராட்டத்துக்கு வித்திட்டுள்ளது.

பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter (BLM) இயக்கம் மீண்டும் சமூக ஊடகங்களில் உலக கவனத்தை ஈர்த்து, அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை மற்றும் இனவெறி தாக்குதல்களுக்கு எதிராகப் போராடி சமூக நீதியைக் கோரி வருகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு நீக்கப்பட்ட காவல்துறை அதிகாரியான டெரெக் சாவ் இப்போது இரண்டாம் நிலை கொலை (திட்டமிடப்படாத கொலை) குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தின்போது நிகழ்விடத்தில் இருந்த மற்ற மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.