கோவிட்-19: 7 புதிய பாதிப்புகள், 3 மாதங்களில் மிகக் குறைந்த பாதிப்புகள்

இன்று நண்பகல் வரை ஏழு புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, ஏழு புதிய பாதிப்புகளில், இரண்டு இறக்குமதி பாதிப்புகள், ஐந்து மலேசியர்கள் சம்பந்தப்பட்ட உள்நாட்டு பாதிப்புகள் என்று தெரிவித்தார்.

உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட ஐந்து பாதிப்புகளில், இரண்டு பாதிப்புகள் சிலாங்கூரின் செப்பாங்கில் ‘நோயாளி 8,294’ உடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

மற்ற மூன்று பாதிப்புகள், புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு முகாமிலும், லிகாஸில் உள்ள சபா பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும், மற்றும் சபாவில் உள்ள கோத்தா கினாபாலு சமூக பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், 20 நோயாளிகள் மீட்கப்பட்டதாகவும், இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நூர் ஹிஷாம் கூறினார். இதனால், குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 6,694 அல்லது 80.4 சதவீதம் ஆகும்.

மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,329 ஆகும், அவற்றில் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள
பாதிப்புகள் 1,518 ஆகும்.

இதுவரை, ஆறு நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர், ஒருவருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

இன்று இறப்புகள் எதுவும் பதிவாகாமல், இறப்பு எண்ணிக்கை 117 பேராக அல்லது மொத்த பாதிப்புகளில் 1.4 சதவீதமாக உள்ளது.