269 ரோஹிங்கியா அகதிகளை ஏற்றி வந்த படகு ஒன்று இன்று காலை லங்காவியின் கடல் பகுதியில் நுழைய முயன்றபோது தடுக்கப்பட்டது.
படகில் இறந்து கிடந்த ஒரு பெண்ணின் உடலையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதிகாரிகள் படகை நெருங்கியபோது, சுமார் 53 ரோஹிங்கியா அகதிகள் கடலில் குதித்து கடற்கரையை நோக்கி நீந்தி சென்றுள்ளனர். இருப்பினும், அவர்கள் அனைவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
பரிசோதனையில் போது, படகு வேண்டுமென்றே துளையிடப்பட்டுள்ளது என்றும், சரிசெய்ய முடியாத நிலையில் இயந்திரமும் மோசமாக சேதமடைந்துள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது.
“படகில் ஏற்பட்ட சேதம் காரணமாக அதை திரும்ப அனுப்பும் நடவடிக்கை சாத்தியமற்றதாகி விட்டது.”
“மனிதாபிமான கொள்கையின் அடிப்படையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) படகுகளை லங்காவியின் Jeti Teluk Ewa பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதித்துள்ளது. அனைத்து 269 சட்டவிரோத குடியேறிகளும் லங்காவி தேசிய முகாமில் (Kem Bina Negara Wawasan Langkawi) தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
“இதற்கிடையில், இறந்த அந்த பெண்ணின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளில் 80 ஆண்கள், 138 பெண்கள், 26 சிறுவர்கள் மற்றும் 23 சிறுமிகளைக் கொண்டிருந்ததாக முந்தைய நாள், மெட்ரோ டெய்லி தெரிவித்திருந்தது. அவர்கள் மியான்மரில் உள்ள காக்ஸ் பஜார் அகதிகள் முகாமில் இருந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.
படகு 500க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்களை ஏற்றி வந்ததாக நம்பப்படுவதாகவும், அவர்களில் 200 பேர் வழியில் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 7 நிலவரப்படி, மலேசிய ஆயுதப்படை, காவல்துறை, மற்றும் பல ஏஜென்சிகள் அடங்கிய தேசிய பணிக்குழு 396 சட்டவிரோத குடியேறிகள், 108 படகு தலைவன்கள் மற்றும் 11 கடத்தல்காரர்களை தடுத்து வைத்துள்ளது.
இதற்கிடையில், 140 சட்டவிரோத குடியேறிகள், ஆறு தலைவன்கள் மற்றும் 22 கப்பல்கள் எல்லைக்குள் நுழைய முயன்றபோது திரும்ப அனுப்பப்பட்டுள்ளன.