மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை ஏற்க மறுக்கிறது வங்கதேசம்

மலேசிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 269 ரோஹிங்கியா அகதிகளை ஏற்க மறுத்துவிட்டதாக வங்கதேசம் நேற்று தெரிவித்துள்ளது.

“பங்களாதேஷ் அவர்களை ஏற்றுக்கொள்ளாது. ரோஹிங்கியா அகதிகளை இனி ஏற்றுக்கொள்வதற்கு வங்கதேசத்திற்கு எந்தக் கடமையும் இல்லை, நிலையும் இல்லை” என்று அதன் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் அனடோலு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷியர்கள் அல்ல என்றும், அவர்கள் மியான்மர் குடிமக்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

மலேசிய அதிகாரிகள் திங்களன்று 269 ரோஹிங்கியா அகதிகளை கைது செய்ததோடு, லங்காவி தீவில் இருந்து சேதமடைந்த படகில் ஒரு சடலத்தையும் கண்டனர்.

ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ளும் சுமை வங்கதேசத்திற்கு மட்டும் இருக்கக்கூடாது என்றும் மற்ற நாடுகளும் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

“தற்போது பங்களாதேஷில் தஞ்சம் அடைந்துள்ள 1.1 மில்லியன் ரோஹிங்கியாக்களை வெளியேற்றி மற்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல நாங்கள் வரவேற்கிறோம்” என்று மோமன் கூறினார்.

இதற்கிடையில், காக்ஸ் பஜாரில் உள்ள ஒரு தற்காலிக முகாமில் இருந்த இரண்டு ரோஹிங்கியா அகதிகள் கோவிட்-19 கிருமியால் நேற்று இறந்தனர். இதுவரை அங்கு மூன்று பேர் இறந்துள்ளனர்.

“இன்று, செவ்வாய்க்கிழமை, மேலும் இரண்டு மரணங்கள் மற்றும் ஆறு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 35 ஆகும்” என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஒரே கூடாரத்தில் தங்கியிருக்கும் நோயாளிகளுடன் 20,000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.