‘எனக்கு என்ன கிடைக்கும்’ கட்சியை திறக்க போகிறேன், மகாதீர் கிண்டல்

பெர்சத்து கட்சியில் தொடர்ந்த கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் மீண்டும் மலாய்காரர்கள் சார்ந்த ஒரு கட்சியை உருவாக்கும் யோசனையை கிண்டலான முறையில் கூறியுள்ளார்.

பெர்சத்துவின் அவைத் தலைவராக தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்ட டாக்டர் மகாதீர், புதிய கட்சிக்கு ‘எனக்கு என்ன கிடைக்கும் கட்சி’ என்று பெயரிடப்படும் என்றும் தேசிய கூட்டணி அரசாங்கத்தில் இன்னும் பதவி வழங்கப்படாத அனைத்து மலாய்க்காரர்களுக்கும் இதன் உறுப்பியம் திறந்திருக்கும் என்றும் தனது வலைப்பதிவில் கேலியாக எழுதியுள்ளார்.

“பல மலாய்க்காரர்கள் அரசியல் கட்சி திறக்க விரும்புகிறார்கள். முன்னதாக நான் ‘பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா’ (பெர்சத்து) கட்சியை அமைத்தேன். இப்போது அந்த கட்சி இரண்டாகப் பிரிந்துவிட்டது.”

“அதனால்தான் இன்னொரு மலாய் அரசியல் கட்சியை உருவாக்க நான் விரும்புகிறேன். இந்த கட்சியின் பெயர் ‘ஏஏடி கட்சி’ (Parti AAD) அதாவது “எனக்கு என்ன கிடைக்கும் கட்சி” (“Parti Apa Aku Dapat”).

“கட்சியின் குறிக்கோள்: இன்னும் ஒன்றும் கிடைக்காத மலாய்க்காரர்களை வளப்படுத்துதல் ஆகும்”

“வழிமுறைகள்: இன்னும் ஒன்றும் கிடைக்காதவர்களுக்கும், மேலும் அதிகமாக சம்பாதிக்க விரும்புவோருக்கு இலாபகரமான வருமானத்தை வழங்குவதற்காகவும், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற பல அமைப்புகளில் அவர்களை அதிகாரிகளாக நியமித்தல்.”

“அழைப்பு: பதவி ஒன்றும் இல்லாதவர்கள் இந்த கட்சியின் சேர்ந்தால், அவர்கள் உறுப்பினர், தலைவர், துணைத் தலைவர், மற்றும் பல பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.”

“கட்டணம்: தேவையில்லை” என்று அவர் எழுதினார்.

பிரதமர் முகிதீன் யாசின் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவர்களுக்கு பதவிகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டுகளை அவர் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

பாக்காத்தான் மற்றும் அதன் கூறு கட்சிகளுக்கு இப்போது அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் உள்ளிட்டு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வருகின்றனர் என்ற ஊகத்தின் அடிப்படையில் மகாதீர் இப்படியான கருத்தை வெளியிட்டுள்ளார்.

கட்சியில் இருந்து தவறாக பதவி நீக்கம் செய்ததாகக் கூறி மகாதீர் மற்றும் ஐந்து பேர் சமீபத்தில் முகிதீன் மற்றும் மூன்று பேருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 23ம் தேதி, பெர்சத்து உச்ச மன்றக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் தொடர்ச்சியான ஆடியோ பதிவுகளை மகாதீருக்கு ஆதரவாக இருக்கும் ஒரு முகநூல் பக்கம் வெளியிட்ட பின்னர் முகிதீன் சர்ச்சையில் சிக்கினார்.

அந்த ஆடியோ பதிவு ஒன்றில், முகிதீனின் குரலை ஒத்த ஒரு நபர், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி அல்லது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி) பதவியை வழங்கினால் அவர்களை பெர்சத்து கட்சியில் சேர தூண்டலாம் என்று கூறியிருந்தார்.

மே 21 வரை, 113 தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 82.3 சதவீதத்தினர் அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள், துணை அமைச்சர்கள், ஜி.எல்.சி. நியமனங்கள், அல்லது சிறப்பு தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அடங்குவர்.