பொதுத் தேர்தலுக்குத் தயாராகிறார் முகிதீன்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட திடீர் அரசாங்க மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் தணிந்து வருவதால், பிரதமர் முகிதீன் யாசின் தனது தேசிய கூட்டணி அரசாங்கம் தேர்தலின் மூலம் ஆணை கோருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் தேர்தலை நடத்தத் தயாராகி வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்படி நடந்தால், பக்காத்தான் ஹராப்பானுக்கும் தேசிய கூட்டணிக்கும் எதிரான முதல் தேர்தலை நாடு எதிர்கொள்ளும்.

ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற உச்ச மன்ற கூட்டத்தில், முகிதீன் தேர்தலை நடத்த விருப்பம் தெரிவித்ததை பெர்சத்துவின் உச்ச மன்ற (எம்.பி.டி) உறுப்பினர் முஹம்மது பைஸ் நாமன் உறுதிப்படுத்தினார்.

“நிலைமை சீரானவுடன், பொதுத் தேர்தலை விரைவில் நடத்த முடியும் என்று நம்புவதாக கூட்டத்தின் போது முகிதீன் கூறினார். மக்கள் ஆணை இல்லை என்று குற்றம் சாட்டப்படுவதை நாங்களும் விரும்பவில்லை” என்றார்.

பொதுத் தேர்தலுக்கான காலக்கெடுவை முகிதீன் குறிப்பிடவில்லை என்றாலும், உச்ச மன்ற கூட்டம் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளது. பெர்சத்து உட்பூசலை தீர்ப்பதற்கான ஒரு வழியாக இது அமையும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், தனது கூட்டணிகளான அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுடன் இடங்களை பிரிப்பது குறித்து முகிதீனுக்கு ஒரு பெரிய சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில், பெர்சத்து மற்றும் அம்னோ, 48க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களில் மோதின. அவற்றில் 13 இடங்களை மட்டுமே பெர்சத்து வென்றது.

பெர்சத்து பின்னர் அம்னோவிலிருந்து 16 நாடாளுமன்ற உறிப்பினர்களையும் பி.கே.ஆரிலிருந்து 10 பேரையும் ஈர்த்தது.

தேர்தல் நடந்தால் பெர்சத்து வைத்திருக்கும் 39 இடங்களுக்கும் உரிமை கோர அனுமதிக்கப்படுமா என்பது உறுதியாக இல்லை. இருப்பினும் தேசிய கூட்டணி ஒரு முறையான கூட்டணியாக மாறியவுடன் இந்த பிரச்சினை குறித்து தீர்வு காண முடியும் என்று பைஸ் நம்புகிறார்.