அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் இனவெறியை ஊதி பெரிதாக்கி விட்டன. இதனால், பக்காத்தான் ஹராப்பான் கட்சி மலாய்க்காரர்களின் அடிமட்ட ஆதரவை இழந்துள்ளது என்று அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் இனவெறி உணர்வுகளை கடுமையாக எதிர்ப்பதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக மத சார்பு கட்சிகள் இவ்வகையான செயல்களை கண்டிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
இனவாதமும் இனரீதியான தப்பெண்ணமும் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதே உண்மை என்றும் அதை அரசியல் கட்சிகள், குறிப்பாக அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றால் தூண்டப்பட்டுள்ளது என்றும் அன்வார் கூறினார்.
“ஒரு முஸ்லிமாக, இதுபோன்ற குறுகிய இன மனப்பான்மையை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.”
“ஒரு முஸ்லீமாக இது எனது நம்பிக்கைகளுக்கு மாறாக உள்ளது. ஒரு முஸ்லீம் நியாயமானவராக இருக்க வேண்டும், மனிதாபிமானம் உள்ளவராக இருக்க வேண்டும். எவரையும் ஒடுக்கவோ, வேறு இனத்தை அல்லது மதத்தை அவமதிக்கவோ முடியாது” என்று மலேசியாகினிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறினார்.
இரண்டு ஆண்டுகளாக பாக்காத்தான் நிர்வாகத்தின் மீது மலாய்க்காரர்களின் கோபத்தைப் பற்றியும் அதனால் மலாய்க்காரர்களின் ஆதரவை இழந்துள்ளது குறித்தும் கேட்டபோது அன்வார் இவ்வாறு கூறினார்.
அனைத்து வகையான இனப்பாகுபாட்டையும் ஒழிக்கும் தீர்மானத்தை (ICERD) அங்கீகரிப்பதற்கான பாக்காத்தான் அரசாங்கத்தின் முயற்சியை எதிர்த்து பாஸ் மற்றும் அம்னோ கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐசெர்ட்டின் ஒப்புதல் முயற்சிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் வெளிப்பாடாக தலைநகரில் பாக்காத்தான் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அமைதி பேரணிக்கு இது வழிவகுத்தது.
ஐசெர்ட்டை அங்கீகரிப்பதற்கான அரசாங்க முயற்சிகள், இஸ்லாம், மன்னர்கள் மற்றும் மலாய்க்காரர்களின் உரிமைகளை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கை என்று அம்னோ மற்றும் பாஸ் கூறுகின்றது.
கூடுதலாக, டிஏபி கட்சி, நாட்டில் மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்திற்குமான எதிர்ப்பான ஒரு கட்சி என்று அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளால் “தாக்கப்பட்டுள்ளது”.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (Rasulullah SAW) அவர்களின் தோழர்களின் கதையை மேற்கோள் காட்டிய அன்வார், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்ற இனங்களின் மீதான இனவெறியை தடை செய்ததாக கூறினார்.
“அது நமது (இஸ்லாமிய) மதத்தில் கற்பிக்கப்படவில்லை. ஆனால், நடைமுறையில் நாம் அடிப்படைகளிலிருந்து எவ்வாறு விலகிவிட்டோம் பாருங்கள்.”
“இதை கண்டிப்பதற்கு நமது தஸ்கிரா, மதபோதகர்கள் (உஸ்தாஸ்), மத சார்பு கட்சி எங்கே போனது? அதனால் தான் நான் எதிர்க்க விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.