சிலாங்கூர் துணை சபாநாயகர் பி.கே.ஆரை விட்டு வெளியேறினார்

சிலாங்கூர் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் தரோயா அல்வி, பி.கே.ஆரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியை விட்டு வெளியேறிய முகமது அஸ்மின் அலியுடன் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் இவர்.

பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கட்சித் தலைமை மீது நம்பிக்கையை இழந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பி.கே.ஆர் மகளிர் துணைத் தலைவி தெரிவித்தார்.

முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மற்றும் ஜுரைடா கமாருதீன் ஆகியோருக்கு ஆதராவாக இருந்த தரோயா அல்வி, பி.கே.ஆரிலிருந்து வெளியேறுவது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.

பிரதமர் முகிதீன் யாசினின் தலைமையிலான பெர்சத்துவில் இணைந்து தேசிய கூட்டணியை (பி.என்) அமைப்பதற்காக அஸ்மினும் அவரது முகாமும் வெளியேறியபோது பி.கே.ஆரில் தரோயாவின் நிலைப்பாடு சற்று நிலைகுலைந்து போனது.

அன்வார் மற்றும் அவரது “கூட்டாளிகள்” பெரும்பான்மையினரின் நம்பிக்கையை நிறைவேற்றத் தவறியதாக தரோயா பத்திரிகையாளர் சந்திப்பில் விவரித்தார்.

எனவே, பி.கே.ஆர் போராட்டம் இனி அரசியல் சீர்திருத்தத்திற்காக அல்லாமல் அரசியல் அதிகாரத்திற்காகவும், உறுப்பினர்களை நீக்குவதிலும் உள்ளதால், தாம் இனி அதில் ஈடுபட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.