உலகளாவிய அடிப்படை வருமான வகை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துகிறது PSM

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் பணத்தை செலவழிக்கத் தயாராக இருக்கும் வேளையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் உதவும் நோக்கில், இதை திறம்பட செய்ய வேண்டும் என்று மலேசிய சோசலிய கட்சி (பிஎஸ்எம்) தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தற்போது வருமான ஆதாரம் இல்லாதவருக்கு, மாற்றியமைக்கப்பட்ட உலகளாவிய அடிப்படை வருமான வகை திட்டத்தை (யுபிஐ)/Universal Basic Income (UBI) வழங்குவதன் மூலம் அரசாங்கம் இந்த இலக்கை அடைய முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.

“மலேசியாவில் பொருளாதார மந்தநிலை காரணமாக நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க யுபிஐ ஒரு கருவியாக பயன்படும் என்று பிஎஸ்எம் நம்புகிறது.”

“என்ன நடந்தாலும், மலேசியாவில் யாரும் பட்டினி கிடப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருமானம் இருக்க வேண்டும். வேலையின்றி இருந்தாலும், அவர்கள் உணவு வாங்க வருமானம் ஈட்ட முடியும் என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.”

“அதற்காக, மாற்றியமைக்கப்பட்ட யுபிஐ ஒன்றை நாங்கள் பரிந்துரைக்கிறோம். தற்போது பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் நபர்கள் அல்லது மாதத்திற்கு 1,000 ரிங்கிட்டுக்கு மேல் ஓய்வூதியம் பெறும் நபர்கள் இதில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் வருமான ஆதாரம் இல்லாமல் இருக்கும் இந்த பிரிவில் உள்ளவர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு மாத சம்பளத்தைப் பெறுவார்கள்.”

“யாரும் பட்டினி கிடப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம்” என்று டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.

“மக்களை வேலை செய்யாமல் இருக்க ஊக்கப்படுத்த கூடாது என்பதால், யூபிஐ கீழ் பிஎஸ்எம் ஒரு மாதத்திற்கு ரி.மா.1,000ஐ முன்மொழிகிறது. அடிப்படை உணவுப் பொருட்களை வாங்குவதற்கு இந்த தொகை போதுமானதாக இருக்க வேண்டும்.”

“பொருளாதாரம் தொடர்ந்து இயங்க வேண்டும். நாம் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்ய வேண்டும். யுபிஐ சலுகையினால், மக்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்க நாங்கள் விரும்பவில்லை.”

“எனவே யுபிஐ தொகை குறைந்தபட்ச ஊதியத்திற்கு கீழே இருக்க வேண்டும். ஆனால் மலேசியாவில் குறைந்தபட்ச ஊதியம் மிகப் பெரிய அளவில் இல்லாததால் யுபிஐ தொகை மிகக் குறைவாகவும் இருக்கக்கூடாது” என்று அவர் கூறினார்.

இதுபோன்ற திட்டங்களுக்கு அவசர தேவை இருப்பதால் இந்த கொள்கை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும், என்றார் டாக்டர் ஜெயக்குமார்.

ஊதிய மானியங்கள் போன்ற தற்போதைய அரசாங்கக் கொள்கைகள், முறையான தொழிலாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது. அதேசமயம், ரப்பர் விவசாயிகள் மற்றும் கிராமத்தில் இதர வேலைகள் செய்பவர்கள் போன்ற பல முறைசாரா தொழிலாளர்கள் இருப்பதால், அவர்கள் தற்போதைய பல அரசாங்கக் கொள்கைகளிலிருந்து அதிகம் பயனடையவில்லை, என்று டாக்டர் ஜெயக்குமார் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் பணம் பல சிறு தொழில்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

“ஆனால் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும், மக்கள் இன்னும் உணவின்றி தான் இருக்கிறார்கள்.”

“இவை அனைத்தும் திருத்தப்பட்ட யுபிஐயின் கீழ் பாதுகாக்கப்படும். உணவு இல்லாத குடும்பங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த இப்போது நமக்கு யுபிஐ அவசியம் தேவை” என்று டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.