இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியாவில் 41 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,494 ஆக உள்ளது.
இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் மூன்று இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 38 உள்ளூர் தொற்று பாதிப்புகள் என்று விவரித்தார்.
38 உள்ளூர் நோய்த்தொற்றுகளில், 32 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை, மற்றும் ஆறு உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்டவை ஆகும். அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்றுநோய் பாதிப்புகளில், மிகப்பெரிய பாதிப்பாக நெகேரி செம்பிலனில் உள்ள ஒரு கோழி பண்ணையில் இருந்து உருவான பெடாஸ் திரளையிலிருந்து 15 பாதிப்புகள் உள்ளன.
அதைத் தொடர்ந்து போர்ட் டிக்சன் மலேசிய குடிநுழைவு அகாடமியில் 14 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புக்கிட் ஜாலில் தடுப்பு முகாமில் இருந்து இங்கு மாற்றப்பட்டவர்கள் ஆகும்.
மீதமுள்ள பாதிப்புகளில் ஒரு துப்புரவு நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் சம்பந்தப்பட்டவை ஆகும்.
மலேசியர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் பாதிப்புகளில், சிலாங்கூரில் இரண்டும், மலாக்காவில் இரண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெகேரி செம்பிலன் மற்றும் சபாவில் தலா ஒரு பாதிப்பு உள்ளது.
சிலாங்கூரில் ஒரு நபர் சம்பந்தப்பட்ட பாதிப்பு, கோலா சிலாங்கூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்கள் ‘நோயாளி 8,294’ உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.
மலாக்காவில் உள்ள பாதிப்பு, ‘நோயாளி 7,817’ உடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். மற்றவை மதப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டவை ஆகும்.
நெகேரி செம்பிலனில் நடந்த பாதிப்பும் மதப் பள்ளி சம்பந்தப்பட்டது. அதே நேரத்தில் சபாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ‘நோயாளி 8,403’ உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவருடன் தொடர்புடையது.
மேலும் 54 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,400 ஆகவும் அல்லது 97.1 சதவிகிதமாகவும் உள்ளது.
இது மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 973 ஆகக் கொண்டுள்ளது.
நான்கு நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்த நோயாளிகளுக்கும் சுவாச உதவி தேவையில்லை.
மலேசியாவில் கோவிட்-19 இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 121 ஆகும். புதிய மரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று நூர் ஹிஷாம் இன்று தெரிவித்தார்.