சிலாங்கூர் பாக்காத்தான அரசாங்கத்தை வீழ்த்த சதித்திட்டம் ஏதும் இல்லை

தேசிய கூட்டணிக்கு (பிஎன்) ஆதரவு அளிப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை மறுத்துள்ளார் பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனல் ஆபிடின்.

பி.கே.ஆர் கட்சியில் ஒரு தலைவராக இருக்கும் ரோசானா, அக்குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று விவரித்தார். இது தேசிய கூட்டணியின் “திட்டமிட்ட பிரச்சாரம்” என்றும், மத்திய அரசு மட்டத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய அரசியல் பிரச்சனைகளின் அழுத்தத்தினால் பரப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“இந்த ஆதாரமற்ற அவதூறுகளை நான் கடுமையாக நிராகரிக்கிறேன், இது முற்றிலும் தவறானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.”

“இவ்வாறான அவதூறுகள், மக்களின் ஆணையை மீட்டெடுப்பதற்கும் தேசிய கூட்டணி அரசியல் பேரழிவிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கும் பக்காத்தான் ஹராப்பன் (பிஹெச்) மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் ஒருபோதும் குறைக்காது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரோசானா தனது அறிக்கையில், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி ஆகியோருக்கும் தனது ஆதரவைத் தெரிவித்தார்.