செராடோக் பி.கே.ஆர் கிளை: 25 அடிமட்டத் தலைவர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்

29 செராடோக் பி.கே.ஆர் கிளை உறுப்பினர்களிலிருந்து மொத்தம் 25 அடிமட்டத் தலைவர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

பி.கே.ஆர் அரசியலமைப்பின் படி, இனி தேசிய பி.கே.ஆர் தலைமை அக்கிளையின் நிர்வாகத்தை இடைநிறுத்தவோ, கலைக்கவோ அல்லது கையகப்படுத்தவோ வேண்டியது அவசியமாகிறது.

இன்று ஒரு அறிக்கையில், 25 கிளைத் தலைவர்கள் குழு, கட்சி மீதான நம்பிக்கையை இழந்ததற்காக பி.கே.ஆரை விட்டு வெளியேறுவதாகக் கூறியது.

“நாங்கள் எங்களின் மற்ற அடிமட்ட உறுப்பினர்களைப் போலவே கட்சியில் நடக்கும் உள் கொந்தளிப்பை அறிந்தும் கவனித்தும் வருகிறோம். இதனால் எங்களின் அன்பு கட்சி இப்போது திக்கு தெரியாமல் போய்விட்டது; அதன் அழிவுக்கும் வழிவகுத்துள்ளது.”

“இன்றுவரை குரல் எழுப்பி வந்த சீர்திருத்த திட்டங்களுக்காகப் போராடாமல், பிரதமர் ஆவதற்கான தலைவைரின் தனிப்பட்ட ஆசைகளில் கட்சி அதிக அக்கறை காட்டுவதால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம்” என்று 25 உறுப்பினர்கள் குழு கூறியது.

கட்சி அரசியலமைப்பின் படி, கிளையில் மூன்றில் இரண்டு பங்கு அலுவலர்கள் வெளியேறுவதால், தேசிய பி.கே.ஆர் தலைமை, இத்தொகுதியின் நிர்வாகத்தை இடைநிறுத்தவோ, கலைக்கவோ அல்லது கையகப்படுத்தவோ வேண்டும்.

பிப்ரவரி இறுதியில் பி.கே.ஆரை விட்டு வெளியேறி இப்போது தேசிய கூட்டணியில் உறுப்பினராக உள்ள எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் துறையின் துணை அமைச்சர் அலி பிஜுவின் நாடாளுமன்றத் தொகுதியாக செராடோக் உள்ளது.