ஜூலை 4, 2020ல் நடைபெறும் சினி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தெங்கு ஜைனுல் ஹிஷாம் உசினுக்கு தனது தனிப்பட்ட ஆதரவை அறிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்.
சினி வாக்காளர்களுக்கான சிறப்பு வீடியோவில், பெர்சத்து கட்சியின் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சுயேட்சை வேட்பாளர் தெங்கு ஜைனுல், மும்முனைப் போட்டியில் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்று மகாதீர் கூறினார்.
“பெர்சத்து கட்சி எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. ஆனால் நான் இந்த சுயேட்சை வேட்பாளர் தெங்கு ஜைனுலை ஆதரிக்கிறேன். சினி மக்களும் அவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று மகாதீர் கூறினார்.
சினி வாக்காளர்கள் எந்தவிதமான கொடுப்பனவிலும் மயங்கி விடக்கூடாது என்றும், இது சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் மகாதீர் தனது வீடியோவில் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், கட்சியின் அனுமதியின்றி போட்டியிட தெங்கு ஜைனுல் எடுத்த முடிவு தனது உறுப்பினர் நிலையை பாதித்துவிட்டது என்று பெர்சத்து பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீன் இன்று ஒரு தனி அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தினார்.
“N23 சினி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும், பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் முகமட் ஷாஹ்ரிம் ஜெய்னுக்கு முழு ஆதரவையும் வழங்குவதற்கான பெர்சத்துவின் முடிவுக்கு எதிராக தெங்கு ஜைனுலின் நடவடிக்கைகள் உள்ளன.”
“அதன்படி, தெங்கு ஜைனுலின் எந்தவொரு அறிக்கையோ, அல்லது நடவடிக்கைகளோ பெர்சத்துவை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை” என்று அவர் கூறினார்.