“வழிகாட்டி அமைச்சராக இருக்க எனக்கு விருப்பமில்லை” டாக்டர் மகாதீர்

மத்திய அரசை மீண்டும் கைப்பற்றினால், அமைச்சரவையில் சிறப்பு பதவியில் டாக்டர் மகாதீர் நியமிக்கப்படுவார் என்ற பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் யோசனையை நிராகரித்துள்ளார் டாக்டர் மகாதீர் முகமது.

அன்வார் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமரான மகாதீர் அவரது வழிகாட்டியாகவோ அல்லது அரசாங்க ஆலோசகராகவோ நியமிக்கப்படலாம் என்றும் பி.கே.ஆர் வலியுறுத்தியது. முன்னாள் பிரதமரை அரசாங்க ஆலோசகராக நியமித்த சிங்கப்பூர் நாட்டை போன்று இது அமையும்.

“இல்லை, நான் இதை ஏற்க மாட்டேன்” என்று மகாதீர் கூறினார்.

“எனது அனுபவத்தின் அடிப்படையில், முன்னாள் பிரதமர்களான அப்துல்லா அகமட் படாவி, நஜிப் ரசாக் முதல், இப்போது உள்ள பிரதமர் முகிதீன் யாசின் வரை, நான் அறிவுரை கூற முயற்சிக்கும்போதெல்லாம், அவர்கள் அதை நிராகரிப்பார்கள், அல்லது ஏற்க மறுப்பார்கள்.”

“தாங்களே பிரதமராக பொறுப்பில் இருப்பதைக் காட்ட அவர்கள் விரும்புகிறார்கள். எல்லா யோசனைகளும் தங்களிடமிருந்து வருவதையே விரும்புகிறார்கள். அவர்கள் தங்களின் அரசியல் மரபுகளை விட்டுச் செல்ல விரும்புகிறார்கள். அவர்களின் அரசியல் மரபு மகாதீரிடமிருந்து தான் வந்தது என்று பின் கூற தேவையிருக்காது” என்று 94 வயதான மகாதீர் கூறினார்.