2020 பள்ளி விடுமுறைகள் குறித்து கல்வி அட்டவணையில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய எதிர்ப்பார்ப்பதாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் (என்.யு.டி.பி) தலைவர் அமினுதீன் அவாங், தெரிவித்துள்ளார்.
இரண்டாவது மற்றும் ஆண்டு இறுதி பள்ளி விடுமுறை நாட்கள் குறைக்கப்படுவது, குறிப்பாக சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் கற்பிகும் தீபகற்பத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு விரக்தியையும் பதட்டத்தையும் தரும் என்று அவர் கூறினார்,.
“கல்வி அமைச்சு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். விடுமுறைகளைக் குறைக்க கல்வி அமைச்சு எடுத்த முடிவு விரக்தியையும் பதட்டத்தையும் உருவாக்கும், அத்துடன் (ஆசிரியர்களின்) பல திட்டங்களையும் சீர்குலைக்கும்.”
“பல ஆசிரியர்கள், குறிப்பாக சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள், சிறிது காலமாக தங்களின் ஊர் மற்றும் கிராமத்திற்குத் திரும்பமுடியாமல் இருக்கிறார்கள். மேலும் அவர்களின் அசல் விடுமுறையின் போதே தங்களின் ஊர்களுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர். ஆனால் சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது.”
“கல்வி அமைச்சு இந்த முடிவை மறு மதிப்பீடு செய்து அதன் அசல் விடுப்புக்கு திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
முன்னதாக, பள்ளி விடுமுறைக்கான திருத்தத்தில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மத்திய ஆண்டு விடுமுறைகள் ஒன்பது நாட்களில் இருந்து ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன.
ஜொகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநில பள்ளிகளுக்கு, இறுதி ஆண்டு விடுமுறைகள் 42 நாட்களில் இருந்து 14 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா பள்ளிகளுக்கு 41 நாட்களில் இருந்து 13 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 இன் விளைவாக மூன்று மாதங்களுக்கும் மேலாக பள்ளி மூடப்பட்ட பின்னர், மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு உதவும் வகையில் பள்ளித் திட்டத்தில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.