சைபுதீன்: கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் பாக்காத்தான் கூட்டணி உறுதியாகவே உள்ளது

பிரதமர் வேட்பாளர் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) உறுதியாகவே உள்ளது என்று பி.கே.ஆர் பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

பி.கே.ஆர், டி.ஏ.பி, அமானா ஆகியவற்றுக்கு இடையிலான உறவில் எந்த மாற்றமும் இல்லை என்று சைபுதீன் கூறினார்.

டிஏபி மற்றும் அமானா ஆகியவை டாக்டர் மகாதீர் முகமதுவை பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதாகக் கருதப்பட்டாலும், தங்கள் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமே பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்ற முடிவில் பி.கே.ஆர் உறுதியாக இருக்கிறது என்று சைஃபுதீன் கூறினார்.

இரு கட்சிகளும் பாக்காத்தானில் நிலைத்திருக்கவே தேர்வு செய்துள்ளன என்று சைபுதீன் கூறினார்.

“பிரதமர் வேட்பாளர்கள் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன, அவ்வளவுதான்,” என்று அவர் கூறினார்.

அன்வாருக்கு போதுமான ஆதரவு கிடைக்காவிட்டால் இரு கட்சிகளும் மகாதீரை ஆதரிக்க தயாராக இருக்கும் என்று மேலும் விளக்கினார் சைபுதீன்.

“ஆனால், துன் மகாதீரருக்கு போதுமான ஆதரவு இருக்கிறதா?” என்றும் கேட்டார்.

இருப்பினும், மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான உறவு குறித்து கேட்டபோது, பி.கே.ஆர் திறந்த மனப்பான்மையுடன் இருப்பதாகவும், எதிர்காலத்தில் யாருடனும் உறவை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும் சைபுதீன் கூறினார்.

மகாதிர் மற்றும் அன்வார் 20 ஆண்டுகளாக எதிரிகளாக இருந்தபோதிலும், 14வது பொதுத் தேர்தலில் பெர்சத்துவை பாக்காத்தானில் இணைத்துக்கொள்வதன் மூலம் கட்சி தனது வெளிப்படையான தன்மையை நிரூபித்துள்ளது, என்றார்.

“ஜனநாயகத்தில், ஆதரவின் எண்ணிக்கை அடிப்படையில், அனைவருடனும் உறவு கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் நாம் தெளிவான கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.”

“பி.கே.ஆருக்கு மட்டும் அரசாங்கத்தை அமைக்க போதுமான எண்ணிக்கை இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

பிரதமர் வேட்பாளர் மீதான சர்ச்சை குறித்து கேட்டபோது, பிரதமர் ஒரு மலாய் கட்சியை வழிநடத்தும் நபராக இருக்க வேண்டும் என்று மகாதீர் நம்புவதாக சைபுதீன் கூறினார்.

“ஜூன் 9 அன்று நடந்த கூட்டத்தில், பிரதமர் ஒரு மலாய்க்காரராகவும் மற்றும் ஒரு மலாய் கட்சியை வழிநடத்தும் நபராகவும் இருக்க வேண்டும் என்று மகாதீர் கூறினார்,” என்று சைபுதீன் கூறினார்.

எனவே, பாக்காத்தான் தலைவரான அன்வார் பல இனக் கட்சியின் தலைவராக இருப்பதால் மகாதீர் அன்வாரை ஏற்கவில்லை என்று சைபுதீன் மேலும் கூறினார்.

“என்னைப் பொறுத்தவரை, இது ஒரு சாதாராண கூற்று மட்டுமல்ல, அது அவரது டி.என்.ஏவில் ஊறியுள்ளது என்று அவர் கூறினார்.