நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்கவும் – அம்னோ

சிங்கப்பூர் பிரதமரை பின்பற்றி, நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்கவும் – அம்னோ அறிவுறுத்தல்

15வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்க நாடாளுமன்றத்தை கலைக்க சிங்கப்பூரின் வழியை பின்பற்றுமாறு அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் பிரதமர் முகிதீன் யாசினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு நல்ல நம்பகமான ஆணை கிடைக்கும் வகையில் நாட்டின் அரசியல் நிலையை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறினார்.

“ஜூலை 10, 2020 அன்று பொதுத் தேர்தலை நடத்த அனுமதிக்கும் வகையில் சிங்கப்பூரின் பிரதமர் லீ ஹ்சியன் லூங் அக்குடியரசு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.”

“ஆளும் அரசாங்கத்திற்கு நல்ல நம்பகமான ஆணை இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”

“நம் நாட்டின் சூழலில், பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி (பிஎன்) தாமதமின்றி இதைச் செய்தால் நல்லது” என்று முகமட் ஹசான் இன்று ஒரு முகநூல் பதிவில் எழுதினார்.

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மலேசியா இன்று உள்ளது போல் மிகவும் நிலையற்ற அரசியல் தன்மையில் இருந்ததில்லை என்று முகமட் ஹசான் கூறினார்.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வரவு செலவுத் திட்டத்தை அறிவிப்பது உட்பட பல முக்கியமான மசோதாக்களை அரசாங்கம் நிறைவேற்றுவது தற்போதைய சூழ்நிலை கடினமாக்கியுள்ளது என்றார்.

“நாடாளுமன்றத்தில் ஆணையும் பெரும்பான்மையும் கொண்ட ஒரு அரசாங்கத்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். நாம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களிலிருந்தும் மலேசியாவை மீட்டெடுக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்த முடியும்” என்றும் அவர் கூறினார்.

“எனவே, அதிகாரத்தை மக்களுக்கு திருப்பித் தந்து, தங்கள் தாயகத்திற்கான முன்னேற்ற வழியை அவர்களே தீர்மானிக்கட்டும்” என்று அவர் மேலும் கூறினார்.