பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் ஊழல் தடுப்புக்கான சிறப்பு அமைச்சரவை குழு (ஜே.கே.கே.எம்.ஆர்)/Jawatankuasa Khas Kabinet Mengenai Anti-Rasuah (JKKMAR) இன்று பாக்காத்தான் ஹராப்பான் நிர்வாக குழுவின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
“இந்த சந்திப்புக் கூட்டம், முந்தைய ஜே.கே.கே.எம்.ஆர் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளுடன் உடன்பட்டு சில முக்கியமான முடிவுகளை எட்டியுள்ளது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பதவியேற்ற நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் நிர்வாக மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பெற்ற சொத்துக்கள் மற்றும் பரிசுகளை அறிவிப்பதன் கட்டாயம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக முகிதீன் கூறினார்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர், முந்தைய கூட்டத்தின் பரிந்துரைகளைப் பின்பற்ற ஜே.கே.கே.எம்.ஏ.ஆர் ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.
ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக, ‘அமைப்புகளில் ஊழல் தடுப்பு திட்டம்’ (ஓஏசிபி)/Pelan Anti-Rasuah Organisasi (OACP) மற்றும் ‘ஊழல் இடர் மதிப்பீட்டை’ (சிஆர்எம்)/Penilaian Risiko Rasuah (CRM) அனைத்து அமைச்சகங்களிலும் மற்றும் பொதுத்துறையிலும் திறம்பட அமல்படுத்துவதும் இதில் அடங்கும்.
மார்ச் மாதத்தில், அதாவது தேசிய கூட்டணி பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள், அனைத்து அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் ஒரு மாதத்திற்குள் தங்கள் சொத்துக்களை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு அறிவிக்க முகிதீன் உத்தரவிட்டார்.
பாக்காத்தான் அரசாங்கத்தின் போது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் சொத்துக்களை அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட போது, அதை கடுமையாக எதிர்த்த பாஸ் கட்சி இப்போது இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
பாக்காத்தான் அரசாங்கத்தின் கீழ், அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தங்கள் சொத்துக்களை அறிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
அந்த நேரத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சொத்துக்களை அறிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கடுமையாக எதிர்த்தனர்.