பிரதமர் வேட்பாளராக ஷாஃபி: அப்தால்?

வாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபி அப்தாலை எதிர்க்கட்சியின் பிரதமராக ஆதரித்துள்ள டாக்டர் மகாதீர் முகமதுவின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கை பி.கே.ஆரை நிலைகுலைய வைத்துள்ளது.

மகாதீரை பிரதமர் வேட்பாளராக பெயரிட பி.கே.ஆர் கடுமையாக எதிர்த்தது. அதோடு, பி.கே.ஆர் அதன் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை பிரதமர் பதவிக்கு வலியுறுத்தியுள்ள நிலையில், மகாதீர் இந்த திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பி.கே.ஆர் இப்போது இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள போது, பெரும்பாலான எதிர்க்கட்சி அணிகளால் இது ஆதரிக்கப்படுவதாகவே தெரிகிறது.

38 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள பி.கே.ஆர் கட்சியின் முடிவு, தேசிய கூட்டணியில் இருந்து ஆட்சியைப் பெறுவதற்கான முயற்சி வெற்றிபெறுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் முக்கியமான பங்கை வகிக்கும் என்று கூறப்படுகிறது.

ஷாஃபி அப்தால் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்படுவதில் கட்சி உடன்படுகிறதா என்று கேட்கப்பட்டதற்கு, பி.கே.ஆர் கட்சியின் பொதுச்செயலாளர் சைஃபுதீன் நாசுஷன் இந்த கேள்வியை நிராகரித்து, பி.கே.ஆர் அதன் கூறு கட்சிகளுடன் இது குறித்து விவாதிக்கும் என்று மட்டுமே கூறினார்.

“அமானா மற்றும் டிஏபி இது குறித்த பேச்சுவார்த்தைகளை பாக்காத்தானுக்கு கொண்டு வரும் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பின் பி.கே.ஆர் தனது கருத்துக்களை தெரிவிக்கும்” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.