மலேசிய வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார்

சபாநாயகர் முகமட் அரிஃப் முகமட் யூசோப் மற்றும் அவரது துணை சபாநாயகர் ஙா கோர் மிங் ஆகியோரை மாற்றுவதற்கான தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார் பிரதமர் முகிதீன் யாசின்.

மற்றொரு துணை சபாநாயகர், பாத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத் ஹஸ்னோன் இதில் பாதிக்கப்படவில்லை. அவரை மாற்றுவதற்கான தீர்மானம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த விஷயத்தை ஙா இன்று மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.

“இது நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது, நாடாளுமன்ற விதிகளுக்கு இணங்க அனைத்து தீர்மானங்களும் நியாயமான முறையில் கையாளப்படும்” என்று அவர் கூறினார்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை நீக்கும் தீர்மானத்தை கொண்டுவரும் முகிதீனின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் நடைமுறைக்கு அப்பாற்பட்டவை என்றும், இது மலேசிய வரலாற்றில் முதல் முறையாகும் என்றும் ஙா கூறினார்.

“நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது, அல்லது சபாநயகர் இறக்கும் போது அல்லது சபாநாயகர் ராஜினாமா செய்யும் போதே, மாற்றங்கள் ஏற்படும். இந்த மூன்று சூழ்நிலைகளும் இப்போது நடக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

“எங்கள் நிலைப்பாடு முகவும் எளிதானது. நாடாளுமன்றம் எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம். சபை நாங்கள் நீடிக்க வேண்டுமென்றால் நாங்கள் இருப்போம். நீடிக்க வேண்டாம் என்று விரும்பினால் நாங்கள் விலகுவோம். அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிகளின்படியே அனைத்தும் செய்யப்படும்” என்று அவர் கூறினார்.