அரசியல் சதி ஆட்டங்களை நிராகரிக்கவும் – அன்வார் இப்ராஹிம்

அரசியல் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் நிராகரிக்குமாறு பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஷாஃபி அப்தாலை எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அன்வார் இவ்வாறு கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பதிவிட்ட அன்வார், “அரசியல் சதி ஆட்டங்களை நிராகரிக்கவும்” என்று பெரிய எழுத்துக்களில் எழுதியுள்ளார்.

“மக்களைப் பாதுகாப்பதா அல்லது பழைய முறையை தொடர்ந்து பின்பற்றுவதா” என்று அவர் நேற்று எழுப்பிய கேள்விகளை மீண்டும் எழுப்பினார்.

“அரசியல் என்பது அரசியல்வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தந்திரோபாயங்களைத் தேடுவது பற்றியது அல்ல. அரசியல் என்பது நிர்வாகம் பற்றியது, மக்களைப் பற்றியது” என்றார் அன்வார்.

புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கான பாக்காத்தான் ஹராப்பானின் திட்டங்கள், அன்வார் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இடையே நிலவிக்கொண்டிருக்கும் கருத்துவேறுபாடுகளினால் முட்டுக்கட்டையாகவே உள்ளன.

இதனிடையே, டிஏபி மற்றும் அமானாவின் உயர்மட்ட தலைவர்களுடன் சேர்ந்து, ஷாஃபியை பிரதமராக ஆதரிக்கவும், அன்வார் மற்றும் முக்ரிஸ் மகாதீர் ஆகியோர் துணை பிரதமர் வேட்பாளராகவும் மகாதீர் முடிவு செய்துள்ளார்.

இந்த விவகாரம் இன்னும் பாக்காத்தான் மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமானா மற்றும் டிஏபி தரப்பினர் கூறியுள்ளனர்.

மலேசியர்கள் உண்மையான மாற்றத்தை கொண்டு வரவும், அரசியல் தந்திரோபாய விளையாட்டை நிராகரிக்கவும் முடியும் என்றார் அன்வார்.

“மலேசிய மக்கள் இந்த பிரச்சினையை தீர்க்கும் திறனைக் கொண்டவர்கள். அவர்கள் சரியான மாற்றங்களைச் செய்ய வல்லவர்கள்.”

“அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் தங்களின் பேராசைகளை நிறைவேற்றவும், குடும்பத்தை முன்னேற்றவும், பிறரை பழிவாங்கவும் அரசியலை பயன்படுத்தக்கூடாது.”

“சமாதானமாகவும் வலிமையுடனும் மீண்டும் மலேசியாவை அனைவருக்குமான ஒரு அழகான நாடாக மாற்றவும்” என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.