“சிலரைப் போல” தான் சதி திட்டம் ஏதும் தீட்டவில்லை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். சில தேசிய கூட்டணி (பிஎன்) தலைவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக அவர் இதைத் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீனுடன் அவரின் சமீபத்திய சந்திப்பைப் பற்றி கேட்டபோது, “அது குறித்து நான் கடந்த மாதம் பாக்காத்தான் சபைக்கு அறிவித்து விட்டேன்,” என்று அவர் கூறினார்.
“பிரதமர் முகிதீன் யாசினுடனும் ஒரு சந்திப்பு நடந்தது. அதை பற்றியும் நான் பாக்காத்தானிடம் தெரிவித்துவிட்டேன்.”
“மற்றவர்களைப் போல நான் சதி திட்டம் எதுவும் போடவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.
அக்கூட்டத்தில், அன்வார், நடப்பு விவகாரங்கள் மற்றும் உள்துறை அமைச்சு தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதித்தாகவும், எதிர்க்கட்சியின் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஜூன் 25 அன்று அமானா, டிஏபி மற்றும் வாரிசான் தரப்பினரை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதில், வாரிசான் தலைவர் ஷாஃபி அப்தாலை பாக்காத்தான் பிளஸின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டதாகத் தெரிகிறது.
பாக்காத்தான் பிரதமராக யார் வருவது என்பது குறித்து மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான பிரச்சனையைத் தீர்க்கவும் கிழக்கு மலேசியாவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியாகவும் இந்த திட்டம் இருப்பதாகக் காணப்படுகிறது.
ஷாஃபியை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்கும் முடிவு கூட்டத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மகாதீர் கூறினார்.
இருப்பினும், இவ்விவகாரம் குறித்து முதலில் கட்சி மற்றும் பாக்காத்தான் மட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும் என்று டிஏபி மற்றும் அமானா தெரிவித்துள்ளன.