இன்று பிற்பகல் வரை, மலேசியாவில் கோவிட்-19 இன் 18 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சபாவில் உள்ள ஒரு கைதியும் உட்பட்டுள்ளார். சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையை தொடர்ந்து அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இன்று ஒரு அறிக்கையில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில் இன்று நான்கு இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 14 உள்ளூர் பாதிப்புகள் உள்ளதாக அறிவித்தார்.
இறக்குமதி பாதிப்பில் மூன்று மலேசியர்களும் ஒரு நிரந்தர குடியுரிமைப் பெற்றவரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
“14 உள்ளூர் பாதிப்புகளில், அனைத்தும் மலேசிய குடிமக்கள் அல்லாதவை ஆகும்” என்று அவர் கூறினார்.
இவற்றில், ஒன்பது பாதிப்புகள், நெகிரி செம்பிலான், பெடாஸில் உள்ள திரளை சம்பந்தப்பட்டவை ஆகும்.
சிலாங்கூர் செப்பாங்கில் குடிநுழைவு தடுப்பு முகாமில் இரண்டு கைதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
மற்ற இரண்டு பாதிப்புகள் சபாவில் கண்டறியப்பட்டவை. மேலும் ஒரு பாதிப்பு, கோலாலம்பூரில் ஒரு கட்டுமான தள தொழிலாளி சம்பந்தப்பட்டது.
புதிய பாதிப்புகள் இன்று மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,634 ஆக கொண்டு வந்துள்ளது.
இன்று மேலும் 10 நோயாளிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் நூர் ஹிஷாம். இது குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 8,318 அல்லது 96.3 சதவீதமாக கொண்டு வந்துள்ளது.
195 பேர் சிகிச்சையில் உள்ளனர், அவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.