‘பி.கே.ஆர் பழிவாங்குகிறது’, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹனிசா குற்றச்சாட்டு

நேற்று நடந்த கட்சி கூட்டத்தில் பி.கே.ஆரிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஹனிசா தல்ஹா, இந்நடவடிக்கையை “பழிவாங்கும் நடவடிக்கை” என்று விவரித்துள்ளார்.

முன்னாள் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலிக்கு நெருக்கமான கட்சி உறுப்பினர்களை குறிவைத்து துரத்துவதன் மூலம், கட்சி இப்போது பழிவாங்குவதாகக் காணப்படுகிறது என்று முன்னதாக பி.கே.ஆர் மகளிர் தலைவியாக இருந்த ஹனிசா கூறியுள்ளார்.

“நீதிக்கான போராட்டத்திலிருந்து பி.கே.ஆர் விலகிக்கொண்டே போகிறது,” என்று இந்த விஷயத்தில் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு அதிகாரப்பூர்வ கடிதமோ அல்லது அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஹனிசா கூறினார்.

ஹனிசா உட்பட தனது ஐந்து உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதாக நேற்று பி.கே.ஆர் மத்திய தலைமைக் கவுன்சிலின் மாதாந்திர கூட்டத்தில் (எம்.பி.பி) அறிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அஸ்மின் மற்றும் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஜுரைடா கமாருடினை சந்தித்ததற்காக ஹனிசா ஏப்ரல் 6 ஆம் தேதி பி.கே.ஆரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஹனிசாவை நீக்கம் செய்ததன் மூலம், சிலாங்கூரில் உள்ள பி.கே.ஆருக்கு 14வது பொதுத் தேர்தலில் வென்ற 21 இடங்களுடன் ஒப்பிடும்போது இப்போது 17 இடங்களே உள்ளன.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் 56 இடங்கள் உள்ளன. இதில் பாக்காத்தான் 41 இடங்களைக் கொண்டுள்ளது அதாவது பி.கே.ஆர் (17), டிஏபி (16) மற்றும் அமானா (8) ஆகும். இதனிடையே, பாரிசான் (5), பாஸ் (1), பெர்சத்து (5) மற்றும் சுயேட்சை (4) இடங்களையும் கொண்டுள்ளன.