1எம்.டி.பி வழக்கில் ஸ்ரீ ராமை நீக்கும் விண்ணப்பம் ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் 1 எம்.டி.பி தொடர்புடைய நீதிமன்ற வழக்குகளில் தொடருவதிலிருந்து கோபால் ஸ்ரீ ராமை நீக்குவதற்கான நஜிப்பின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக முன்னாள் வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலி பிராமணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

இந்த தாக்கலின் மூலம், இன்று திட்டமிடப்பட்டிருந்த கோபால் ஸ்ரீ ராம் நீக்கம் தொடர்பான விசாரணை, ஜூலை 13க்கு ஒத்திவைக்கப்பட்டது.

அபாண்டியின் தாக்கலைத் தொடர்ந்து, நீதிபதி மரியானா யஹ்யா இன்று விசாரணையை ஒத்திவைத்தார்.

நஜிப்பிற்கு எதிரான மற்றொரு 1 எம்.டி.பி வழக்கிலும், ஸ்ரீ ராமை அரசு தரப்பில் இருந்து நீக்க ஜூன் 14 அன்று நஜிப்பின் வழக்கறிஞர் குழு விண்ணப்பத்தை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

அபாண்டியின் பிரமாணப் பத்திரம் அவ்விண்ணப்பத்தை ஆதரிக்கிறது.

அதில், 2018 ஜனவரியில் அப்போது பிரதமராக இருந்த நஜிப்பை கைது செய்யுமாறு ஸ்ரீ ராம் அவரை வற்புறுத்த முயன்றதாக அப்பாண்டி சமூக ஊடகங்களில் கூறிய தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.

டாக்டர் மகாதீர் முகமதுவின் கட்டளையின் பேரில் ஸ்ரீ ராம் அவ்வாறு செய்ததாக அபாண்டி கூறினார்.

இன்று, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், அவருக்கு எதிரான 1 எம்.டி.பி தொடர்பான விசாரணையில் இருந்து ஸ்ரீ ராம் நீக்கப்பட வேண்டும் என்று நஜிப்பின் மற்றொரு விண்ணப்பத்தை விசாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

முன்னதாக, ஸ்ரீ ராமை நீக்கும் கோரிக்கையின் முடிவு நிலுவையில் உள்ள நிலையில், விசாரணையை ஒத்திவைக்க வேண்டி நஜிப் அளித்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இருப்பினும், அவ்விண்ணப்பத்தைத் தொடர மேல்முறையீட்டு நீதிமன்றம் நஜிப்பிற்கு ஒப்புதலை வழங்கியது. இந்த முடிவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து, வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பியது.