ஹம்சாவுடன் ஒத்துழைப்பு கூடாது – சிவராசா, மரியா திட்டவட்டம்

பெர்சத்து கட்சியின் பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடினுடனான எந்தவொரு ஒத்துழைப்பையும் நிராகரிக்கும் என்ற டிஏபி மற்றும் அமானாவின் நிலைப்பாட்டிற்கு இரண்டு பி.கே.ஆர் பிரதிநிதிகள் ஆதரவளித்துள்ளனர்.

சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா ஆகியோர் முறையே டிஏபி மற்றும் அமானாவிற்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

“ஹம்சாவும் அவருடன் சேர்ந்து மற்ற சிலரும் சதித்திட்டத்தை அரங்கேற்றி அரசாங்கத்தை கைப்பற்றினர். நீங்கள் அதை ஒரு பழக்கமாக மாற்ற விரும்புகிறீர்களா? இந்த சதித்திட்டம் சரியானது என்று உலகில் எங்கேயும் யார் கூறியும் நான் கேள்விப்பட்டதில்லை” என்று மரியா கூறினார்.

சிவராசா மற்றும் மரியா ஆகியோரின் வெளிப்படையான அறிக்கையை கண்டித்த பி.கே.ஆர், பாக்காத்தான் உடனான தங்கள் உறவை பாதிக்கக்கூடிய அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று அதன் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மையில், டிஏபி மற்றும் அமானா கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பி.கே.ஆருக்கு எதிராக கூட்டு அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். தங்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் கட்சி தாமதப்படுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஷெரட்டன் நகர்வின் முதுகெலும்பாக அஸ்மின் மற்றும் ஹம்சா ஆகியோர் இருந்ததாக பேசப்பட்டது. இது பாக்காத்தான் அரசாங்கத்தை அகற்றுவதற்கும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கவும் வழி வகுத்தது.

கடந்த பொதுத்தேர்தலில் பாக்காத்தானுக்கு எதிரிகளாக இருந்தவர்களுடன் இப்போது கூட்டணி வைத்துள்ள ஹம்சாவுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் அல்லது ஒப்பந்தம் செய்யும் முயற்சிகளையும் நிராகரிப்பதாக டிஏபி மற்றும் அமானா கூறியுள்ளன.

பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், பிரதமர் முகிதீன் யாசின் மற்றும் ஹம்சா ஆகியோரை சந்தித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் டிஏபி மற்றும் அமானாவால் விரோதிகளாக கருதப்படுகிறார்கள். கூட்டத்தின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், கூட்டம் நடந்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் அதை பாக்காத்தான் உச்ச மன்றத்திற்கு அறிவித்ததாகவும், அவர் தனது நண்பர்களுக்கு பின்னால் சதி திட்டம் ஏதும் தீட்டவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஷெரட்டன் நகர்வுக்கு பங்காற்றியதை கருத்தில் கொண்டு, ஹம்சாவுடனான எந்தவொரு ஒத்துழைப்பையும் நிராகரிப்பதாக டிஏபி மற்றும் அமானா இன்று ஒரு கூட்டு அறிக்கையில் மீண்டும் தெரிவித்தனர்.