முகிதீன் யாசினை 15வது பொதுத்தேர்தலின் பிரதமராக நியமிக்க கொள்கையளவில் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது குறித்து மற்றொரு அம்னோ தலைவர் உடன்படவில்லை என்று தெரிகிறது.
அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி, “பிரதமர் பதவியை பெர்சத்துவிற்கு அடமானம் வைக்கும் எந்தவொரு முடிவும் முதலில் அம்னோ அடிமட்ட உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்றார்.
“அமைச்சர், துணை அமைச்சர்கள் பதவிகளுக்கு ஆசைப்பட்டு பெர்சத்துவில் குதித்து அவர்கள் ஏற்கனவே அம்னோவை அடமானம் வைத்தது போதும்.”
“உச்ச மன்றத்தின் ஒருமித்த கருத்து மற்றும் அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் அம்னோ கவனம் கொள்ள வேண்டும். பிரதமர் பதவியை பெர்சத்துவிற்கு அடமானம் வைப்பது போன்ற முக்கிய முடிவுகள் அடிமட்டத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.”
“பாக்காத்தானுக்கு நடந்தது முவாபாகாட் நேஷனலுக்கு (Muafakat Nasional) நடக்காது என்று நினைக்காதீர்கள். முகிதீன் யாசினும் டாக்டர் மகாதீரும் நண்பர்களா அல்லது எதிரிகளா என்பதில் இன்னும் பலருக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
அம்னோ மற்றும் பாஸ் என்று இரண்டு கட்சிகளும் சுமார் ஐந்து மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ள போதிலும், பெர்சத்து போன்ற ஒரு சிறிய கட்சிக்கு தங்கள் பதவிகளை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதில் அர்த்தமில்லை என்றும் புவாட் மேலும் கூறினார்.
“பிரதமர் பதவியை பெர்சத்துவிற்கு அடமானம் வைத்த டிஏபி மற்றும் பி.கே.ஆர் கட்சிகளுக்கு என்ன நடக்கிறது என்று அம்னோ கவனிக்க வேண்டும்.”
“இறுதியில் அந்த இரண்டு கட்சிகளும் தான் அடமானம் வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, தலைவரால் சிந்தித்து செயல்பட இயலவில்லை என்றால், அடிமட்ட உறுப்பினர்களை சிந்தித்து செயல்பட விடுங்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

























