கட்சியின் RM192.9 மில்லியனை கொடுக்க தவறியதற்காக CIMB வங்கிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு விண்ணப்பத்தை அம்னோ திரும்ப பெற்றது.
பணத்தை அம்னோவுக்கு திருப்பிக் கொடுக்காதவாறு தொடுக்கப்பட்ட அரசு தரப்பின் கோரிக்கையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூன் மாதத்தில், RM192.9 மில்லியன் தொகையை கட்சிக்கு திருப்பித் தரத் தவறியதற்காக அம்னோ, CIMB வங்கிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அதன் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், RM192.9 மில்லியனை திருப்பித் தருவதை ஒத்திவைக்க வேண்டும் என்ற அரசு தரப்பின் கோரிக்கையை ஜூன் 19 அன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அம்னோ இந்த நிதியை பெற CIMB நிறுவனம் அனுமதி வழங்கி விட்டதாக இன்று நடந்த வழக்கின் போது வங்கியின் வழக்கறிஞர் ரவீந்திர நாதன் நீதிமன்றத்திற்கு விளக்கமளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் அந்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, அதன் விண்ணப்பத்தைத் திரும்பப் பெறுமாறு அம்னோ கோரியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.22 மணி முதல் அம்னோவுக்கு RM192.9 மில்லியன் பணத்தை பெற அனுமதி வழங்கப்பட்டதை அம்னோ வழக்கறிஞர் டானியா ஸ்கிவெட்டி உறுதிப்படுத்தினார்.