எந்த நேரத்திலும் திடீர் தேர்தலுக்கான சாத்தியம் உள்ளது என்பது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் இன்று தெரிவித்தார்.
பொதுத்தேர்தலை நடத்த தேசிய கூட்டணி தயாராக இருக்கிறது என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி நேற்று அளித்த அறிக்கை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
“திடீர் தேர்தலைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.”
“நான் தேசிய பாதுகாப்பைப் பாதுகாத்து, மக்களைக் கவனிக்கும் அமைச்சர் மட்டுமே.” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் திடீர் தேர்தலை நடத்த போதுமான அடித்தளத்தைக் கொண்டுள்ளது என்று அஸ்மின் நேற்று தெரிவித்தார்.
சுகாதாரம், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டதால் இது சாத்தியமாகியுள்ளது என்று அஸ்மின் கூறினார்.
இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த முடியும் என்று அஸ்மின் கூறினார்.
இருப்பினும், பெர்சத்துவின் பொதுச்செயலாளருமான ஹம்சா, திடீர் தேர்தல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.
“பிரச்சினையை எழுப்பிய அமைச்சரிடமே நீங்கள் ஏன் கேட்கக்கூடாது? அவர் என்ன சொல்வார் என்று பாருங்கள்?” என்று ஹம்சா நகைச்சுவையாகக் கேட்டார்.
இருப்பினும், விரைவில் ஒரு திடீர் தேர்தல் நடத்தப்படும் என்று அந்த அமைச்சர் ஏற்கனவே கூறியதாக நிருபர்கள் தெளிவுபடுத்திய பின்னர், ஹம்சா “வாவ்” என்று கூறி உற்சாகமடைந்தார்.
“அப்படியா? நான் ஒரு முக்கிய அமைச்சர் அல்ல என்பதால் எனக்கு இது பற்றி ஏதும் தெரியவில்லை. பிரதமர் மட்டத்தில் உள்ள மூத்த அமைச்சர்கள் மத்தியில் திடீர் தேர்தல் நடத்தப்படுவது பற்றி தெரியும் என்று நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
திடீர் தேர்தல் அவரது முன்னுரிமையில் அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.
“தேர்தல் கூடிய விரைவிலோ அல்லது நீண்ட காலம் கழித்தோ என்பது குறித்த விவாதங்கள் எனது முக்கிய திட்டத்தில் அல்ல.”
“எனது முக்கிய திட்டம் என்னவென்றால், பிரதமராக முகிதீன் யாசின் தலைமையின் கீழ் உள்ள தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு முந்தைய அரசாங்கத்தை விட வலுவான கூட்டணி இருப்பதை உறுதி செய்து மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதே ஆகும், “என்று அவர் கூறினார்.