பிரதமர் வேட்பாளர் விவாதத்தில் அம்னோ சிக்க வேண்டாம்

15வது பொதுத் தேர்தலுக்கான தேசிய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி தனது கட்சியை எச்சரித்துள்ளார்.

15வது பொதுத்தேர்தலில் பெர்சத்துவின் முகிதீன் யாசினை பிரதமர் வேட்பாளராக ஆதரவளிக்க அம்னோவும் பாஸ் கட்சியும் ஒப்புக் கொண்டது என்ற அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் அன்னுவார் மூசாவின் நிலைப்பாட்டில் பல அம்னோ தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

“பிரதமர் வேட்பாளர் மீதான விவாதத்தில் அம்னோ சிக்கிக் கொள்ளக் கூடாது. மாறாக மக்களின் நலன்களை பாதுகாக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஜூலை 13 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற அமர்வுக்கு அம்னோ இப்போது முன்னுரிமை அளித்து வருவதாக ஜாஹிட் கூறினார்.

“பிரதமரை சவால் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அம்னோ அறிந்திருக்கிறது.”

“முகிதீன் தலைமையிலான தேசிய கூட்டணியை எதிர்க்கட்சியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க அம்னோ மற்றும் பாரிசான் உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

சில அம்னோ தலைவர்கள், பிரதமர் அம்னோ கட்சியிலிருந்தே வர வேண்டும் என்றும், வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் அது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருக்க வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

தேசிய கூட்டணியை ஒரு அதிகாரப்பூர்வ கூட்டணியாக அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வரும் பொதுத் தேர்தலில் அதன் கூறுக் கட்சிகளுக்கு இடையில் இடங்களைப் பகிர்வது குறித்தும் விவாதிக்கப்படுகின்றன.