மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானது – முகிதீனின் உறுதிமொழி ஆவணம்

மே 18 அன்று நடைபெற்ற ஒரு நாள் நாடாளுமன்ற கூட்டம் சட்டபூர்வமானது, இது மத்திய அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிகளுடன் முரண்படாது என்று பிரதமர் முகிதீன் யாசினின் உறுதிமொழி ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற செயலாளர் நிஜாம் மைடின் பச்சா மைடின் கையெழுத்திட்ட அந்த உறுதிமொழி ஆவணம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் ஜூன் 22 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு நாள் நடைபெற்ற மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா என்பது குறித்த சம்மனுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த நீதிமன்ற ஆவணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஆர் கங்காதரன் மற்றும் சமூக ஆர்வலர் டி.ஆறுமுகம் ஆகியோர் மே 15 அன்று வழக்குத் தாக்கல் செய்ததோடு, முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளாக முறையே முகிதீன் மற்றும் சபாநாயகர் முகமட் ஆரிஃபை பெயரிட்டனர்.

மாமன்னரின் உரைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்ட 18 ஆம் தேதி கூட்டப்பட்ட நாடாளுமன்ற கூட்டம், கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என்றும் அது ஒரு கூட்டமாக செல்லுபடியாகாது என்றும் அவர்கள் நீதிமன்ற உத்தரவை கோரினர்.
நாடாளுமன்றக் கூட்டம் தொடர்பாக இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டதால் மே 18 நாடாளுமன்றக் கூட்டம் செல்லுபடியாகும் என்று அந்த உறுதிமொழி ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு கடிதங்களும் “சபைத் தலைவர்” சம்பந்தப்பட்டது என்று நிஜாம் கூறினார். சபைத் தலைவரே மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தை ஒரு நாளுக்கு நிர்ணயித்தார். கோவிட்-19 பாதிப்பைக் கருத்தில் கொண்டு மாமன்னரின் உரையைக் கேட்பதற்கு மட்டுமே அந்த கூட்டம் என்று அவர் ஆணையிட்டிருந்தார்.

மலேசிய நாடாளுமன்ற அமைப்பின் கீழ், பிரதமரே “அவைத் தலைவராக” உள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மே 18க்கு மாற்றும் ஏப்ரல் 17 தேதியிட்ட கடிதத்தையும், அதே போல் அந்த ஒரு நாள் அமர்வு மாமன்னரின் உரையைக் கேட்பதற்கு மட்டுமே என்று குறிப்பிடும் மே 12 தேதியிட்ட கடிதத்தையும் நிஜாம் குறிப்பிட்டார்.
.
“மே 18, 2020 அன்று நடைபெற்ற முதல் நாடாளுமன்ற கூட்டம், கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிகளுடன் முரண்படவில்லை என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.”

“மூத்த கூட்டாட்சி வழக்கறிஞர்களின் ஆலோசனையின்படி, வாதிகளின் விண்ணப்பங்கள் சட்டம் மற்றும் சபை விதிகளின் அடிப்படையில் தவறானவை என்று நான் நம்புகிறேன்.” என்று நிஜாம் முகிதீன் சார்பாக அளித்த உறுதிமொழி ஆவணத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் ஜூலை 13 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.