அன்னுவார்: அம்னோ, பாஸ் கட்சிகள் முகிதீனை பிரதமராக ஆதரிக்கும்

திடீர் பொதுத் தேர்தல் நடந்தால் முவாபாக்காட் நேசனல் கூட்டணியில் உள்ள அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள், முகிதீன் யாசினை பிரதமராக ஆதரிக்கும் என்று பாரிசான் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா கூறினார்.

எவ்வாறாயினும், “எதிர்வரும் காலங்களில்” முவாபாக்காட்டின் நிலைப்பாட்டைக் கூற இயலாது என்று அன்னுவார் கூறினார்.

“அரசியல் என்பது அடிக்கடி மாறும் ஒரு விடயம். எங்களின் இப்போதைய நிலைப்பாடு பிரதமரை ஆதரிப்பதாகும்.”

“தேர்தல் திடீரென நடத்தப்பட்டால், நாங்கள் பிரதமரை ஆதரிப்போம். ஆனால் அதற்குப் பிறகு, எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல விஷயங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது” என்று இன்று தலைநகரில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவர் கூறினார்.

“ஒரு பொதுச் செயலாளராக, விவாதிக்கப்பட்டதைத்தான் நான் சொல்கிறேன். பிரதமர் பதவி விவாதிக்கப்பட்டுவிட்டது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.”

“நாங்கள் (முவாபாக்கத் நேஷனல்) தற்போதைய பிரதமர் முகிதீனை ஆதரிக்கிறோம். தேசிய கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், இந்நேரத்தில், நாங்கள் பிரதமரை ஆதரிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

“இது வேட்பாளரைப் பற்றி பேசுவதற்கான நேரம் அல்ல, இது மக்களுக்காக உழைக்கும் நேரம்” என்று அவர் கூறினார்.